தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்க நாளை மதியம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். அப்போது தனிக்கட்சி குறித்து அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் விலகியதைத் தொடர்ந்து, உடனடியாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸை கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், நாளை புதிய முடிவை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜிகே வாசன் ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதால், அவரது தலைமையில் மீண்டும் தமாகா உதயமாகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையே, 'நாட்டின் நலன் கருதி, பரந்த மனதோடு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்' என ஜி.கே.வாசனுக்கு அழைப்பு விடுத்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இது தொடர்பாக ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடன் பேசிய ஜி.கே.வாசன், பாஜகவில் சேரும் படி தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என விளக்கமளித்துள்ளார்.
மேலும், தமிழக மீனவர் பிரச்னையில் பாஜக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் அமைக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிக்கப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை மதியம் 12.01 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க வாசன் திட்டமிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
அப்போது புதிய கட்சி தொடர்பான விவரங்களை ஜி.கே.வாசன் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment