9-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் குழு தலைவரும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சிறப்பு தூதருமான டத்தோ சாமிவேலு, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது டத்தோ சாமிவேலு கூறியதாவது:-
முதலாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றது. தற்போது, 9-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடும் கோலாலம்பூரில், ஜனவரி 29-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டினை, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் மலேசிய உலக தமிழாராய்ச்சி நிறுவனம் இணைந்து, மலேசிய அரசின் ஆதரவோடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு ‘நவீன உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை கலாசாரம், சமயம் உள்ளிட்ட 29 தலைப்புகளில், தமிழ் மொழி சார்ந்த ஆய்வு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் கட்டுரைகள் அனுப்பி, மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மலேசியாவுக்கான இந்திய தூதர் சித்ராதேவி, மூத்த வக்கீல் ஆர்.காந்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.


No comments:
Post a Comment