ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் காவல் அதிகாரியை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியபட்டினம் (எஸ்.பி.பட்டினம்)
காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சையது முகமது என்ற இளைஞரை காவல்நிலைய சார்பு ஆய்வாளரான காளிதாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார். காவல்துறை அதிகாரியின் அரக்கத்தனமான இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறையினரில் சிலர் எந்த அளவுக்கு மனிதத்தன்மை அற்றவர்களாகவும், கொலைவெறி கொண்டவர்களாகவும் மாறி வருகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம் ஆகும். காவல்துறையினர் பொதுமக்களின் நண்பர்கள் என்று அத்துறையின் தலைமை கூறிவருகிறது. காவல் நிலையத்திற்கு வருவோரை வரவேற்க வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போது, காவல்நிலைய வரவேற்பு என்பதே அச்சமூட்டுவதாக உள்ளது.
சையது முகமதுவை கொலை செய்த காவல் அதிகாரியை அந்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக கொல்லப்பட்டவர் மீது அவதூறு பரப்பும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது.
கொல்லப்பட்ட சையது முகமது தீவிரவாதி என்று காவல்துறையின் ஒருபிரிவினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இன்னொரு பிரிவினரோ, விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட சையது முகமது காவல் நிலையத்தில் இருந்த சார்பு ஆய்வாளரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகவும், இதையடுத்து தான் தற்காப்புக்காக அவரை காவல் அதிகாரி சுட்டதாகவும் கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால், நடந்த உண்மை வேறு ஆகும். சையது முகமது தீவிரவாதியோ அல்லது ரவுடியோ அல்ல. அவருக்கும், இன்னொருவருக்கும் இடையிலான மோதல் பற்றி விசாரிப்பதற்காகத் தான் அவர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவரை விசாரித்த காளிதாஸ், கடுமையாக தாக்கியதுடன் உடலில் துப்பாக்கியை வைத்தும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தம் மீதான தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத சையது முகமது காவல் அதிகாரியின் சட்டையை பிடித்து ஏன் என்னை தாக்குகிறீர்கள்? என்று கோபமாக கேட்டுள்ளார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத காளிதாஸ், வெறிப்பிடித்தவர் போல மாறி தமது துப்பாக்கியால் அப்பாவி சையது முகமதுவை சரமாரியாக சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒருவர் கத்தி வைத்திருந்தார் என்றும், அதைக் கொண்டு அதிகாரியை குத்த முயன்றார் என்பதும் நம்ப முடியாத கட்டுக்கதையாகவே தோன்றுகிறது. கொல்லப்பட்டவர் இஸ்லாமியர் என்பதாலேயே அவரை தீவிரவாதியாக சித்தரிக்க முயல்வது மோசமான அணுகுமுறை ஆகும்.
தங்களை பாதுகாத்துக் கொள்ள காவல்துறையினர் எந்த எல்லைக்கும் செல்வர் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை சையது முகமது கத்தியால் குத்த வந்தார் என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அவரை காலுக்கு கீழ் சுட்டு செயலிழக்க வைத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மிகவும் நெருக்கமாக நின்று மார்பில் சுட்டுக் கொன்றுள்ளார். இதிலிருந்தே இது என்கவுண்டர் அல்ல; வெறியுடன் நடத்தப்பட்ட படுகொலை என்பதை உணரலாம்.
நடத்தப்பட்டது உண்மையான என்கவுண்டராக இருந்தால், பத்திரிகையாளர்களை அழைத்து நடந்தது என்ன? என்பதை காவல்துறையினர் விளக்கியிருக்க வேண்டும். ஆனால், அனைத்துக் காவலர்களும் காவல் நிலையத்திலிருந்து ஓடிவிட்டதுடன், சார்பு ஆய்வாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்திருப்பதிலிருந்தே காவல்துறை விளக்கம் பொய் என்பதை உணர முடியும்.
தமிழக காவல்துறையினர் எந்த சட்டத்தையும், விதிகளையும் மதிப்பதில்லை. இதற்கு முன் கடந்த 07.01.2014 அன்று சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 15 வயது இஸ்லாமிய சிறுவனை ஆய்வாளர் புஷ்பராஜ் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து தொண்டையில் சுட்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சி விலகும் முன் இப்படி ஒரு படுகொலை நடந்துள்ளது. என்கவுண்டர்கள் தடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்ட சில வாரங்களில் இப்படி ஒரு போலி என்கவுண்டர் நடத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு மேலும் தொடருவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கில் 08.08.2011 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘போலி என்கவுண்டர்களை கொடூரக் கொலைகளாக கருத வேண்டும். இதை அரிதிலும் அரிதான நிகழ்வாக கருதி இதற்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்’’ என்று பரிந்துரை வழங்கியிருந்தது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் காளிதாசை கைது செய்து விசாரித்து தண்டிக்க வேண்டும். கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மற்றவர்களை மதிப்பது எப்படி? மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வது எப்படி? என்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment