இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, சுந்தரபாண்டியபட்டினம் என்னுமிடத்தில் காவல் நிலையத்தில் சையத் முகம்மது என்னும் இசுலாமிய இளைஞர் உதவி ஆய்வாளர் காளிதாசன் என்பவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட சையத் முகம்மது, விசாரணை செய்த உதவி ஆய்வாளர் காளிதாசன் அவர்களை அரிவாளால் தாக்கியதாகவும் அதனால் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் உதவி ஆய்வாளர் தனது கைத்துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதாகவும் அதில் சையத் முகம்மது பலியானதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
காவல் நிலையத்திலேயே அதிகாரிகளைத் தாக்கும் அளவுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடந்துகொள்ள வாய்ப்பில்லை. எனவே, சையத் முகம்மது உதவி ஆய்வாளரைக் கொடூரமாகத் தாக்கினார் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. காவல்துறையினரின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அண்மையில் உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி மாண்புமிகு லோதா வழங்கிய தீர்ப்பு ஒன்றில், காவல்துறையினர் ‘என்கவுன்ட்டர்’ என்னும் பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கொலை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில், தமிழக அரசு சையத் முகம்மதை படுகொலை செய்த உதவி ஆய்வாளர் காளிதாஸ் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும். தற்போது அவரை இடைநீக்கம் செய்திருப்பது போதிய நடவடிக்கை ஆகாது. தமிழகக் காவல்துறையே அவ்வழக்கை விசாரிப்பது பொருத்தமாக அமையாது.
எனவே அவரை முற்றிலுமாக பணிநீக்கம் செய்து, வழக்கை மையப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான சையத் முகம்மது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 25 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமெனவும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் ‘என்கவுன்ட்டர்’ எனும் பெயரில் ஏற்கனவே பலர் படுகொலை செய்யப்பட்டி ருக்கின்றனர். அதன் மீது எத்தகைய விசாரணை நடவடிக்கையும் மேற்கொள்ளப்ப டவில்லை என்பது வேதனைக்குரியதாகும். காவல்துறையில் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தமக்கு வேண்டாதவர்களையும் பழி தீர்த்துக்கொள்வதற்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு வளர்ந்திருக்கிறது. ஆகவே, எந்தவகையிலும் என்கவுன்ட்டர் நடவடிக்கையை ஏற்க இயலாது. தமிழக அரசு ‘என்கவுன்ட்டர்’ போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.”
No comments:
Post a Comment