தமிழக சட்டம் – ஒழுங்கு தொடர்பாக, அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு, “ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. எந்த ஒரு ஜாமீன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகிறதோ இல்லையோ, ஆனால் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ இந்த நீதிமன்றம் மதிக்கிறது. எனவே வீட்டுக் காவலில் வைக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.
எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18-ம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப் பட வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18-ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.
அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது” இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
No comments:
Post a Comment