சென்னையில் போக்குவரத்து எஸ்.ஐ.யுடன் நடுரோட்டில் வாலிபர் ஒருவர் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணவாளன் (55). வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டரான இவர், நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை சிமிட்ரி சாலை சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தடுமாற்றத்துடன் வந்த வாலிபரை மறித்து விசாரித்துள்ளார். போதையில் இருந்த அந்த வாலிபரின் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார் மணவாளன். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், எஸ்.ஐ.யை கீழே தள்ளியுள்ளார்.
மணவாளன் எழுவதற்குள், அவர் மீது பாய்ந்த வாலிபர், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதை பார்த்தது அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்களை பொதுமக்கள் விலக்கிவிட்டனர்.
திடீரென அந்த வாலிபர், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டார். படுகாயமடைந்த எஸ்.ஐ மணவாளன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, எஸ்.ஐ மணவாளனை தாக்கியது வண்ணாரப்பேட்டை சஜ்ஜா முனுசாமி தெருவை சேர்ந்த திலீப் (25) என தெரியவந்தது.
இதையடுத்து திலீப்பை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வாலிபருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment