வழக்குரைஞர் அலுவலகங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் வராமலேயே அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டால் அதுவும் செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில், இளைஞர்கள் தாக்கல் செய்யும் ஆள்கொணர்வு மனுக்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. பெற்றோரின் கட்டுப்பாட்டில் உள்ள தனது மனைவியை மீட்டுத் தரக் கோரும் ஆள்கொணர்வு மனுக்களே அதிகம் தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிகிறது. இது குறித்து மேற்கொள்ளபட்ட விசாரணையில், சில வழக்குரைஞர்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல், அவருக்குத் திருமணம் நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து பெண்ணை மீட்டுத் தருமாறு ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இது குறித்து, சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஜெயகெளரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை அமைக்கப்பட்டது. அது குறித்த அறிக்கை அண்மையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் ராயபுரம், வட சென்னை சார்பதிவாளர் அலுவலகங்களில் இது போன்ற திருமணப் பதிவுகள் அதிகளவில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்த விசாரணை சென்னை ஹைஜோர்ட் நீதிபதிகள் ராஜேந்திரன், பிரகாஷ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் வராமல் அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டால் அது செல்லாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் நடைபெறும் திருமணங்கள் சட்டரீதியாக செல்லாது என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment