Latest News

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !


திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92)ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவின் புலி

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

திப்பு சுல்தான் கேலிச்சித்திரம்

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

திப்புவின் புலிக்கொடி

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

திப்பு சுல்தான்

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

- இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.