”இந்தியாவைப் பொருத்தவரை கிராமப்புறங்களில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் பத்து பேருக்கும், நகரங்களில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 25 முதல் 30 பெண்களும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆரம்ப நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிதால் எளிதில் குணப்படுத்திவிடலாம். 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் மார்பகங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்” என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உடன் பருமன், வாழ்க்கை முறை மாற்றம், மரபணு போன்ற காரணங்களினால் பெண்கள் மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் அதிகப்படியாக பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலைகளை அதிகரிக்கும் அநேக காரணங்கள் அடையாளங் காணப்பட்டுவிட்டன. அறிகுறிகளும் முழுமையாக உணரப்பட்டுவிட்டன. அதனால் தொடக்க நிலையிலே கண்டறிந்தால் பெரும்பாலான புற்றுநோய்களை வென்று நீண்ட காலம் வாழலாம். மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.
யாரை எல்லாம் மார்பக புற்று நோய் தாக்கலாம்?
* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.
* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்– சினைப்பை– பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால், பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.
* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்கள்
* குழந்தைப் பேறு இல்லாதவர்கள்
* தாய்ப்பால் புகட்டாதவர்கள்
* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்
* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்
* கருப்பையை நீக்கியவர்கள்
* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக்கொண்டவர்கள்
* உடல் குண்டானவர்கள்..
ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்!
அறிகுறிகள்:
* மார்பகத்தில் காணப்படும் கட்டி.
* மார்பக காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல். (தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பால் வெளியேறலாம். வேறு எப்போதும், எந்த திரவமும் மார்பக காம்புகளில் இருந்து வெளியேறக்கூடாது. வெளியேறினால் உடனடியாக கவனிக்கவேண்டும்)
* மார்பக காம்புகள் உள்அமுங்கிப்போகுதல்.
* காம்புகளை சுற்றி தடித்துப்போகுதல்.
* மார்பகங்கள் இரண்டிலும் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காணுதல்.
* மார்பகத்தில் குழிவிழுதல்.
* மார்பக சருமத்தில் மாற்றம் ஏற்படுதல்.
* மார்பகத்தில் வலி தோன்றுதல்.
* அக்குளில் கட்டி ஏற்படுதல் மற்றும் அக்குளில் நெரி கட்டுதல்.
* இதயப் பகுதியில் ஏற்படும் அசவுகரியமான வலி.
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலே உஷாராகி விடவேண்டும். ஆனால் அதை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறுவிதமான பாதிப்புகளாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.
சுய பரிசோதனை:
சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலே ஓரளவு கண்டறிய வாய்ப்பிருக்கிறது. பெண்கள் 20 வயதில் இருந்தே இதை செய்துவரவேண்டும். குளிக்க தயாராகும்போது கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, நுனி விரல்களால் மார்பகம் முழுவதையும் மென்மையாக வருடிப்பார்த்தால் கட்டி ஏதாவது இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.
கைகளை மேலே உயர்த்தியபடி நின்றால், கண்ணாடியில் மார்பக அளவுகளில் வித்தியாசங்கள் இருந்தால் தெரிந்துகொள்ள முடியும். காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்த பகுதி சருமங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மார்பகங்களில் நீர்க்கட்டிகள் தோன்றி மறையும். அதை புற்றுநோய் கட்டியாக நினைத்து பயந்துவிடக்கூடாது. அதனால் மாதவிலக்கு முடிந்த பத்து நாட்கள் கழித்து சுய மார்பக பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
டாக்டர்.செந்தில் வசந்த்
No comments:
Post a Comment