மஹராஷ்ட்ராவின் அஹமத்நகர் மாவட்டத்தில், தலித் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சிதைந்த உடல் பாகங்கள் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.
புனே நகரிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஹமத்நகர் மாவட்டத்தில், அக்டோபர் 21ஆம் தேதி அன்று நள்ளிரவு சமயத்தில், சஞ்ஜய் ஜாதவ் என்ற 42 வயது நபரும், அவரது மனைவியும், 19 வயது மகனும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இது மேல் சாதி சமூகத்தினரால் செய்யப்பட்ட கொலை என்று அந்த குடும்பத்தின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட ஜாதவ் என்பவரின் பண்ணைக்கு அருகில் வாழும் மேல்சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணொருவருக்கு, ஜாதவ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவருடன் கள்ள உறவு இருந்ததாக வதந்திகள் பரவியிருந்தன என்றும், அந்த பிரச்சனை தான் இந்த கொலை சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்றும் அந்த குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் ஒருவர் செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன்தான் அந்த ஜாதவ் குடும்ப உறுப்பினர் தகாத உறவு வைத்திருந்ததாக வேறு சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசிய அம்மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் லக்ஷ்மி கவுதம், இந்த குற்றம் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு வருவதாகவும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அதிமாக நடைபெறும் இடமாக கருதப்படும் மஹாராஷ்ட்ராவின் அஹமெத்நகர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் நடைபெறும் மூன்றாவது தலித் கொலை சம்பவம் இதுவாகும். கடந்த 2013 ஆம் ஆண்டில், மூன்று தலித் இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டனர். அதில் ஒரு இளைஞர் மேல்சாதி பெண் ஒருவரை காதலிதத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் மேல் சாதி பெண்ணை காதலித்த ஒரு 17 வயது இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment