தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக நடந்துள்ள கொலை, ஆள்கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கையை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டு மதுரை கிளையில், ஜெய்னாப் பீவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காணவில்லை
என் கணவர் கே.ஜமால் முகமது, கே.எம்.அலாவூதீன் ராவுத்தர் தர்ம அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்தார். இந்த அறக்கட்டளைக்கு ஏராளமாக சொத்துகள் மதுரையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 31-ந் காலையில் வீட்டில் இருந்து காரில் வெளியில் சென்ற என் கணவர் பின்னர், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, செப்டம்பர் 3-ந் தேதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தேன்.
இந்த புகாரின் அடிப்படையில், ‘காணவில்லை’ என்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
நிலத்துக்காக கொலை
இதற்கிடையில், செப்டம்பர் 6 மற்றும் 7-ந் தேதிகளில் ஊடகங்களில் என் கணவர் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி சங்கர், கோர்ட்டில் சரணடைந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசாரிடம் கேட்டபோது, அப்படி யாரும் கோர்ட்டில் சரணடையவில்லை. குற்றவாளிகளை தேடி வருகிறோம் என்று கூறினர். இந்த நிலையில், கொடைக்கானல் அருகே பெருமாள் மலையில் என் கணவர் ஜமால் முகமது பிணமாக கிடப்பதாக உதவி கமிஷனர் தகவல் தெரிவித்தார். இதன்பின்னர், போலீசார் சரியாக இந்த வழக்கை விசாரிக்கவில்லை. அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்துக்காக என் கணவரை ஒரு கும்பல் கடத்திச்சென்று, அவரை மிரட்டி பத்திரப்பதிவு செய்து, பின்னர் அவரை கொலை செய்துள்ளனர்.
சி.பி.ஐ. விசாரணை
இந்த கொலை வழக்கில் வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக செயல்படுகின்றனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதே கோரிக்கையுடன், அலாவூதீன் ராவுத்தர் தர்ம அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உறவினர்கள் என்று 8 பேர் தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர்.
கொடூர முகம்
இந்த மனுக்களை எல்லாம் நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ரியல் எஸ்டேட் தொழில் என்பது தற்போது, குற்றவாளிகள், நில அபகரிப்பாளர்கள் மற்றும் நிலத்தரகர்களுக்கு எளிதாக பெரும் பணத்தை சம்பாதித்து கொடுக்கும் தொழிலாக உள்ளது. இந்த தொழிலின் கொடூரமான, பயங்கரமான முகத்தை வெளிப்படுத்தும் வழக்காக இந்த வழக்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் என்ன நடக்கிறது என்பதை விளக்கும் விதமாக இந்த வழக்கு உள்ளது. மேலும், கிரிமினல்கள் அரசியலில் நுழைந்திருப்பதையும் இந்த வழக்கு வெளிப்படுத்துகிறது.
போலீஸ் தயக்கம்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது சித்திக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். மற்றொருவர் அப்பாஸ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயலாளராக உள்ளார். அதேபோல, இந்த வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக உள்ளார்.
பொதுவாக கிரிமினல்கள் அரசியலுக்குள் நுழைந்து, உள்ளூர் தலைவராகி விட்டால், அவர்கள் அருகே போலீசார் விசாரணைக்காக செல்வதில்லை. அப்படிப்பட்ட நபர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதற்காக, அவர்கள் அருகே நெருங்க போலீசார் தயங்குகின்றனர்.
1.64 ஏக்கர் நிலம்
கொலை செய்யப்பட்ட ஜமால் முகமது நிர்வாக அறங்காவலராக இருந்த அறக்கட்டளைக்கு, மதுரை ஆரப்பாளையம் அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள 1.64 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த அறக்கட்டளையின் சொத்துகளை விற்பனை செய்ய முடியாது என்பதால், கணேசன் என்பவர் அந்த நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாக வருவாய் துறையிடம் ஜமால் முகமது புகார் செய்து, நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற ஜமால் முகமதுவை கடத்திச்சென்று, அரசியல் கட்சி அலுவலகத்தில் வைத்து மிரட்டி, செப்டம்பர் 1-ந் தேதி சர்ச்சைக்குரிய நிலத்தை பலரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
வக்கீல் விடுவிப்பு
இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்ததாகவும், அதன்பின்னர் வக்கீல்கள் சிலர் கும்பலாக வந்து, போலீஸ் நிலையத்தில் இருந்து அவரை மீட்டுச்சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய அந்த வக்கீலை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
இந்த வழக்கில் 6-ந் தேதி கோர்ட்டில் சரணடைந்த சங்கர் என்பவரை ஒரு வாரத்துக்கு பின்னர்தான், காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அதேபோல, ஜமால் முகமது கடத்திச்செல்லப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்ற அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றவில்லை.
விசாரணை மாற்றம்
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு கேட்டு இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தபின்னரே, பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல், ஏராளமான குற்றச்சாட்டுகள் போலீசார் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால், அது சரியாக இருக்காது என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகின்றேன். இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும், வருகிற 24-ந் தேதிக்குள் சி.பி.ஐ. இணை இயக்குனரிடம், தல்லாகுளம் போலீசார் ஒப்படைக்கவேண்டும். இதன்பின்னர் 12 வாரங்களுக்குள் இந்த வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும். அதன்பின்னர், அதுதொடர்பான அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும்.
விவசாய நிலம்
இந்த வழக்கின் மூலம், ரியல் எஸ்டேட் தொழில் எப்படி ஒரு கொடூரமாக உள்ளது என்று தெளிவாகுகிறது. இந்த தொழிலில், பெரும்பாலும் கிரிமினல்கள், அதிகாரமிக்கவர்கள், அரசு உயர் அதிகாரிகள் சிலர் என்று பலர் ஈடுபடுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்த தொழிலால் ஏராளமான கொலைகள், ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
மற்றொரு வேதனையான சம்பவம், இந்த தொழிலுக்காக விவசாய நிலங்களை கூட வீட்டு மனையாக மாற்றி விற்பனை செய்யும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே, பொதுநலன் கருதி, இந்த வழக்கில் மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி. மற்றும் அரசு வக்கீல் கந்தசாமி ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்துக்கொள்கிறேன்.
எத்தனை கொலைகள்?
இவர்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு, விரிவான பதில்களை வழங்கவேண்டும்.
* கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் மாவட்ட வாரியாக ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக எத்தனை குற்றங்கள் நடந்துள்ளது?
* இந்த தொழிலினால், மாவட்ட வாரியாக கொலைகள், ஆள் கடத்தல் சம்பவங்கள் எத்தனை நடந்துள்ளது?
* கடந்த 10 ஆண்டுகளில், நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு சம்பவங்கள் எத்தனை நடந்துள்ளது?
* இந்த நில அபகரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் குற்றங்களில் பிரபல ரவுடி கும்பல்கள், கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் ஈடுபட்டுள்ளனரா?
பதில் அளிக்கவேண்டும்
* நிலம் தொடர்பான நடவடிக்கையில், நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க தீவிர திட்டத்தை அரசு ஏன் உருவாக்கக்கூடாது?
ரியல் எஸ்டேட் தொழில் நடந்து வரும் இந்த கொடூர குற்றங்களை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க, இந்த கேள்விகளுக்கு அரசிடம் இருந்து விவரங்கள் கேட்க பெறவேண்டியதுள்ளது.
எனவே, இந்த வழக்கை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் இந்த கேள்விகளுக்கு தகுந்த பதில்களை தமிழக அரசு இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment