பாரதீய ஜனதாவின் கோட்டையாக உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் 9, ராஜஸ்தானில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 13–ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் குஜராத் மற்றும் பாரதீய ஜனதா ஆளும் ராஜஸ்தானில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வசுந்தரா ராஜே சிந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து மோசமான செய்தியே பதிவாகியுள்ளது. மாநிலத்தில் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்ததில் 200 தொகுதிகளில் 162 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதனையடுத்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 25 மக்களவை தொகுதியையும் தன்வசப்படுத்திக் கொண்டது. ஆனால் தற்போது நடந்த 4 சட்டமன்றத் இடைத்தேர்தலில் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், சுராஜ்கார்க், வீர் மற்றும் நாஷிராபாத் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. நாஷிராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெறும் 300 ஓட்டுக்கள் முன்னிலையிலே வெற்றி பெற்றார். இதனையடுத்து அங்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சுராஜ்கார்க் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சுராஜ்கார்க் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் ராஜேவால் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதீய ஜனதா கட்சி கோடா சவுத் தொகுதியில் மட்டும் குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அங்கு காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி தனித்துவமான வெற்றி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தலை சந்தித்துள்ள தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.க்களாக ஆனதை அடுத்து தேர்தல் நடைபெற்றுள்ளது. பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்ற இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
No comments:
Post a Comment