கந்து வட்டிக்காரர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது என்று அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கிருபாகரன். இவர் 2013ம் ஆண்டு செப்டம்பர் 23ந் தேதி தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், செய்தித்தாளில் வெளியாகியிருந்த கந்து வட்டி கொடுமை தொடர்பான செய்தியின் அடிப்படையில், தானாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கடித்தை ஏற்றுக் கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், கடிதத்தை பொதுநல வழக்குப்பதிவு செய்து, கந்து வட்டி கொடுமையை தடுப் பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டுக்கு உதவும் விதமாகவும் செயல்பட மூத்த வக்கீல் முத்து குமாரசாமியை நியமித் தார். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.சத்தியநாராய ணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராகி கந்து வட்டி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், கந்துவட்டி, மணி கணக்கு வட்டி, தின வட்டி , மீட்டர் வட்டி என்று பல்வேறு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் உள்ளது. தமிழ்நாடு கந்து வட்டி தடைச்சட்டமும் அமலில் உள்ளது. ஏழைகளுக்கு வங்கிகளில் கடன் வாங்க போதுமான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லை.
இதனால், அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் இருந்து பெரும் வட்டிக்கு பணம் பெறுகின்றனர். வட்டி மிக அதிகம் என நினைப்பதே இல்லை. பணம் கிடைத்தால் போதும் என்று வாங்கி விடுகிறார்கள். கந்து வட்டிக்காரர்கள் வட்டிக்கு வட்டி போட்டு, வாங்கிய கடன் தொகையை விட அதிகமாக பணத்தை வசூலிக்கின்றனர். சட்டவிரோதமாக பணம் வசூலிப்பது தவறானது. கந்து வட்டி தடை சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதால், கந்து வட்டிக் கும்பலின் கொடுமையை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே, கந்து வட்டி தடைச் சட்டம், சட்டவிரோத பணம் நடவடிக்கை சட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளும் விதமாக வானொலி, நாளிதழ்கள், தியேட்டர் உள்ளிட்டவைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடவேண்டும். கந்து வட்டிக்காரர்களுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே மாவட்டம்தோறும் கண்காணிப்பு கமிட்டி அமைக்கவேண்டும். போலீசிடம் புகார் கொடுக்கும்போது, அவற்றின் நகல் ஒன்றை கண்காணிப்பு குழுவிடமும் புகார்தாரர்கள் கொடுக்கவேண்டும்.
புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் போலீசார் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும். இவ்வாறு மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி அறிக்கையில் கூறியுள்ளார். இந்த வழக்கை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து, கந்துவட்டிக்காரர்களுக்கு எதிராக புகார் வரும்போது, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இதுகுறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்


No comments:
Post a Comment