Latest News

செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினம்


செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

உலகில் வாழும் 5 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். பால், வயது, நாடுகள் பேதமின்றி தற்கொலை எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் (15 – 19 வயதிற்குட்பட்டவர்கள்) ஒரு இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் தற்கொலை நடைபெறுகின்றது. ஆய்வறிக்கையின்படி கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் தான் தன்னைத்தானே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவிலும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றது. கடந்த இருபது வருடங்களில் தற்கொலை சம்பவங்கள் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்திலும் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் யாருக்கு தோன்றுகிறது என்று சிந்திக்கும் பொழுது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மது மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக மன அழுதத்திற்கு ஆளானவர்கள், பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலை வாய்ப்பின்மையால் விரக்தி அடைந்தவர்கள், எய்ட்ஸ்,ஆஸ்துமா போன்ற கடுமையான நோய் பீடித்தவர்கள், மிக முக்கியமாக தனிமையில் வாடுபவர்கள் இவர்களிடமே தற்கொலை செய்யும் எண்ணம் மேலோங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான தற்கொலைகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன. கணவன் – மனைவி சண்டை, ஆங்கில வழி படிப்பில் தோல்வி, தேர்வில் தோல்வி, காதல், கடன் என்று சிறிய சிறிய பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும். ஆண் – பெண், இரவு – பகல், இன்பம் – துன்பம், வாழ்வு – மரணம் என்று அனைத்தையும் இரண்டிரண்டாக படைத்துள்ள இறைவன் பிரச்சனைகளுடன் அதற்கான தீர்வுகளையும் சேர்த்தே படைத்துள்ளான். ஆதலால் எந்த ஒரு பிரச்சனையானாலும் உரியவர்களிடம் கலந்தாலோசித்து அதற்கான தீர்வு காண முயல வேண்டும். பிரச்சனைகள்,துன்பங்களை எதிர்கொண்டு வாழப் பழகினால்தான் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றி காண முடியும்.

இறைவன் வானம் – பூமி, இவற்றிற்கிடையே உள்ள எண்ணற்ற வாழ்வாதாரங்கள் இவற்றை எதற்காக படைத்துள்ளான்? நாம் இவ்வுலகில் எதற்காக படைக்கப்பட்டுள்ளோம்? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண முயல வேண்டும். அப்போதுதான் தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகள் நம்முன் ஏற்படாது.
பிள்ளை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைகளிக்கேற்ப வாழுதல், தன்னம்பிக்கை, பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்.

ஆன்மீக விஷயங்களில் நாட்டம், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுதல், சரியான முறையில் உடல்நலத்தைப் பேணுதல், புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல் போன்றவை மூலமும் தற்கொலை மனப்பான்மையை களையெடுக்க முடியும்.

தற்கொலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், அதற்கான காரணம் மற்றும் தவிர்க்கும் காரணிகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பாக குழந்தைப் பருவம் முதல் வாலிபப் பருவம் வரை உள்ளவர்களுக்கு தற்கொலை ஒரு சமூகக் குற்றம் என்று உணர்த்த வேண்டும்.

தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்குரிய மையங்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும்.தற்கொலை எண்ணத்தை தூண்டக்கூடிய சமூக, கலாச்சார (சினிமா, நாடகங்கள்,etc..,) காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுகள் தற்கொலைகளை தடுக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.

இறைவன் படைத்த உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இவ்வுலகில் யாருக்கும் உரிமை கிடையாது. இந்த வாழ்வு இறைவன் நமக்கு அளித்த அருட்கொடையாகும். இங்கு நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும், நாளை படைத்த இறைவன் முன் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். கவலைகள், தோல்விகளுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வதென்றால் இவ்வுலகில் யாரும் உயிருடன் வாழ முடியாது.

இறைநம்பிக்கை, கடின உழைப்பு, பொறுப்பை உணர்ந்து செயல்படுதல், ஒழுக்கம் இவையே இன்றைய உலகில் வாழ்வதற்கு தகுதியான உபகரணங்கள் ஆகும். இவற்றை ஒரு மனிதன் பெற்றிருந்தால் எத்தகைய அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும்.

ஆதலால் தற்கொலையை மக்கள் கருத்தாக மாற்றி, அதன் அதனைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால் இந்தக் கொடிய நோயை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.