பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் கடும் அபராதம் விதிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் புகையிலை பொருள் உபயோகத்தை குறைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. உலக புகையிலை ஒழிப்பு தினத்தன்று டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, புகையிலை உபயோகத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை பொருட்கள் உபயோகத்தை குறைக்கவும் நாம் உறுதி ஏற்க வேண்டும்’’ என தெரிவித்தார். புகையிலைப் பொருட்கள் உபயோகத்தை குறைக்க ‘சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் தயாரிப்பு சட்டம், 2003-ல் திருத்தம் கொண்டுவர டெல்லி அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்திரா தலைமையில் நிபுணர் குழு ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் கடந்த வாரம் அமைத்தார். அந்தக் குழுவினர் தற்போது தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருக்கும் முக்கிய அம்சங்கள்:
* சிகரெட் சில்லரை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.
* பொது இடத்தில் புகைப்பிடித்தால் விதிக்கப்படும் அபாராத் தொகையை ரூ.200-லிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
* எச்சரிக்கை படம் வெளியிடுதல் விதிமுறையை மீறும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
* புகை பிடிப்பதற்கான வயதை 18-லிருந்து 25 ஆக உயர்த்த வேண்டும்.
* சிகரெட் விற்பனை இடங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
* சிகரெட் பாக்கெட்டில் 40 சதவீத அளவுக்கு வெளியிடப்படும் சுகாதார எச்சரிக்கை விளம்பரத்தை 80 சதவீத அளவுக்கு உயர்த்த வேண்டும்.
இந்த அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டாலும், அனைத்து பரிந்துரைகளும் அமைச்சரவை குறிப்பில் இடம் பெறாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது இடத்தில் புகைப்பிடிப்பதற்கான அபராதத்தை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தாலும், நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ள ரூ.20 ஆயிரம் அபராதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இந்த அளவுக்கு அபராதம் இருக்காது என கூறப்படுகிறது. நிபுணர் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்ட திருத்தத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு விரும்புகிறது. சிகரெட் விற்பனையில் 70 சதவீதம் சில்லரை விற்பனை மூலம் நடக்கிறது. இதற்கு தடை விதிக்கப்பட்டால், சிகரெட் நிறுவனங்களுக்கு அது பெரும் பாதிப்பாக இருக்கும். புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கிறது. விற்பனை குறைந்தால் வருவாய் பாதிக்கும். மேலும் இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதும் அரசுக்கு மிக சவாலான பணியாக இருக்கும் என கூறப்படுகிறது.
பொது இடத்தில் புகை பிடிப்பதை தடுக்க அரசு ஏற்கனவே பல விதிமுறைகளை அறிவித்தது. ஆனால் அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. அரசின் இந்த திட்டம் குறித்து இந்திய புகையிலை மையத்தின் இயக்குனர், சையது எம் அகமது கூறுகையில், ‘‘இந்தியாவில் புகையிலை பொருட்கள் உபயோகத்தில் சிகரெட்களின் பங்கு 12 சதவீதம் தான். மீதம் 88 சதவீதம் சட்டவிரோத சிகரெட்கள், பீடிகள், மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் போன்றவை. இந்த சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஸி6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. அரசின் நடவடிக்கை எதிர்பார்த்த பலனை ஏற்படுத்தாது. சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனையைதான் அதிகரிக்கச் செய்யும்’’ என்றார்.


No comments:
Post a Comment