மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்ற இளைஞர் கடந்த 11-ஆம் தேதி எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து,12-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
மருத்துவமனையில் அவருக்கு தீவிரமாக தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மாலை அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதயத்தோடு சேர்த்து, பல்வேறு உடல் உறுப்புகளும் லோகநாதனிடம் இருந்து தானமாக பெறப்பட்டன. அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து இதயத்தை அடையாறு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, வழிநெடுகிலும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
போலீஸ் வாகனம் முன்னே செல்ல ஆம்புலன்சில் பாதுகாப்போடு ஈ.வெ.ரா. பெரியார் சாலையிலிருந்து, ராஜாஜி சாலை, காமராஜர் சாலை மற்றும் சாந்தோம் சாலை வழியாக இதயம் 13 நிமிடங்களில் தனியார் மருத்துவமனையைச் சென்று அடைந்தது.
அதன் பலனாக, சென்னையில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞர் லோகநாதனின் இதயம், தானமாகப் பெறப்பட்டு மும்பையைச் சேர்ந்த 21 வயது பெண் ஹோவிக்குப் வெற்றிகரமாக இதயம் பொருத்தப்பட்டது. இதயம் பொருத்தப்பட்ட பெண் அடையார் தனியார் மருத்துவமனையில் இருந்தார். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இதயம் நன்றாக செயல்பட்டு கொண்டிருப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment