Latest News

சுற்றுச்சூழல் நலன் காப்பில் நாம்...


ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமூகத்தில் ’சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு’என்பது மிக முக்கியமான அவசியமான ஒன்று. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வே நம்மில் பலரிடம் இல்லை. இன்னும் பலருக்கும் இன்றுதான் (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் என்பதே தெரியாது. சுற்றுபுறச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவதில்லை. மேலும் நம்மைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் இவ்வாறுதான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இதன் விளைவு... சுற்றுச்சூழலை பற்றிய அவசியத்தை அனைவரும் அறிந்துகொள்ள ’ஐக்கிய நாடுகள் அவையால்’ ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதியை ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வாக கடைபிடித்து வருகிறது.

இன்றைய சமூகத்தில், அறைகுறையாக நாகரீக வளர்ச்சியடைந்த மனிதர்களின் நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனாலும், அதில் சரிசெய்ய வேண்டிய சில தவறுகளை எவரும் நடைமுறைப்படுத்த தயாராக இல்லை. வீட்டைவிட்டு அலுவலகங்களுக்கும் வெளியிடங்களுக்கும் செல்லும் வழியெங்கும் சுற்றுச்சூழலால் பாதிக்கபட்ட இடங்களை தினமும் கடந்து செல்கிறோம். தினமும் பல இடங்களை கடந்து செல்லும் பொழுது, மூக்கை மூடிக்கொண்டும், அவ்விடங்களை கண்டும் காணாமலும் சென்றிருப்போம். இந்நிலைகளுக்கு எல்லாம் யார் காரணம்? நாமே... நாம் மட்டுமே.

நெகிழி (பிளாஸ்டிக்) பைகளும், நெகிழி குப்பிகளும், (பாட்டில்கள்) ஒரு நேரப்பயன்பாட்டு (யூஸ் அண்ட் த்ரோ) நெகிழி மற்றும் காகிதக் குவளைகளும் (கப்ஸ்) சாக்கடைகளை அடைத்துக் கொண்டு நிற்பதை காணதவர்கள் இங்கு எத்தனைபேருண்டு. இல்லை... இவைகளை எல்லாம் பயன்படுத்தாதவர்கள் எத்தனைபேருண்டு இங்கு. இவற்றையெல்லாம் பயன்படுத்தி, சுற்றுச்சூழலையும் கெடுத்து, இதற்கெல்லாம் பலனாக நமக்கு கிடைத்தது எல்லாம் பேர் சொல்ல தெரியாத புதுப்புது நோய்கள்தான்.

பெருகிவரும் நாகரீக ஓட்டத்தில் அளவுக்கு மீறிய பொருட்களை உபயோகிக்கும் வழக்கம் பெருகி வருகிறது. அழகான நெகிழி பைகளையும், தண்ணீர் மற்றும் குளிர்பான குப்பிகளையும்த் தூக்கி கொண்டு அலைபவர்களை தினமும் சாலைகளில் காணலாம். கார்களிலும், பைக்களிலும் சென்றுவிட்டு மாலையில் நடைபயிற்சி செய்பவர்கள், அருகில் இருக்கும் கடைக்கோ, சந்தைக்கோ செல்ல வாகனத்தைப் பயன்படுத்துவார்கள். நெகிழி பயன்பாடு ஒருபக்கம் என்றால் காற்றில் கார்பனின் பங்கும் பெருகி வருகிறது. குறைந்தபட்சம் சில இடங்களுக்கு நடந்து செல்லலாம் அல்லது மிதிவண்டியை பயன்படுத்தலாம். இதன் மூலம் வாகனங்களின் கார்பன் உற்பத்தியை குறைக்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் பயணம் செய்யும் பொழுது நாமெல்லாம் குடிநீரை வீட்டில் இருந்து எடுத்து சென்றிருப்பது அனைவரும் அறிந்தது. இன்று அதனைக்கூட தூக்க முடியாமல் வழிகளில் விற்கும் குடிநீர் பாட்டில்களையும், மூன்று மற்றும் ஐந்து ரூபாய் குடிநீர் பாக்கெட்களையும் வாங்குகிறோம். நீரைக் குடித்துவிட்டு பாட்டில்களையும், பாக்கெட்களையும் எறிந்துவிடுவோம். இதுவும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று. குடிநீரை பணத்திற்கு விற்பதே தவறு என்றால், அதனை நெகிழியில் அடைத்து விற்பது  அதைவிட பெரும் தவறு. அதுவும் இந்தியா மாதிரியான வெப்ப பிரதேசங்களில், நெகிழியின் உருகும் தன்மை அதிகம். நெகிழி உருகி, குடிநீரோடு கலப்பதால், கேன்சர்  போன்ற கொல்லை நோய்கள் பல உருவாகக்கூடும்.

தேநீர் கடைகளில் உபயோகிக்கப்படும் பேப்பர் கப்ஸ், பிளாஸ்டிக் கப்ஸ் எவையுமே முறையாக குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவது இல்லை. அருகில் உள்ள பயனற்ற இடங்களில், சாக்கடை கால்வாய்களில் கொட்டப்படுகின்றன. நண்பர்களே இனி அனைவரும் நெகிழியில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும், டீ கப்கள்,  பாட்டிகளில் அடைக்கப்பட குடிநீர், பாக்கெட்களில் அடைக்கபட்ட குடிநீர் என பெருமளவு சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழி பயன்பாட்டைத் தவிர்த்து, நம்முடைய சுகாதாரத்தையும் நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் காப்போம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.