மின்கட்டணம் செலுத்திவிட்டீர்களா? என்பதை ஞாபகப்படுத்த எஸ்.எம்.எஸ். அனுப்பும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
ஞாபக மறதி
தமிழகத்தில் 1 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரம் வீட்டு இணைப்புகள், 19 லட்சத்து 11 ஆயிரம் விவசாய பம்பு செட்கள், 26 லட்சத்து 32 ஆயிரம் வணிக நிறுவனங்கள், 5 லட்சத்து 9 ஆயிரம் தொழிற்சாலைகள், 20 லட்சத்து 8 ஆயிரம் பிறவகை மின் இணைப்புகளும் உள்ளன. மின்சார உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே ஏற்பட்ட வித்தியாசத்தை போக்கி கடந்த 1–ந் தேதியில் இருந்து மின்சாரம் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மின் கட்டணத்தை ஆன்–லைன் முறையில் செலுத்தும் வசதியையும் மின்வாரியம் ஏற்படுத்தி தந்துள்ளது. ஆனால் ஆன்–லைனில் செலுத்துவதாக இருந்தாலும் அதற்கான கடைசி தேதி மற்றும் தொகை தெரிந்திருந்தால் மட்டுமே செலுத்த முடியும். தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலைமை வரை சென்றுவிடுகிறது. இதனை தவிர்ப்பதற்காக மின்சார வாரியம் மின்நுகர்வோர்களின் செல்போன்களுக்கு மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி மற்றும் தொகை குறித்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
மின்நுகர்வோர்களுக்கு குறுஞ்செய்தி
நுகர்வோர்கள் மின் கட்டணத்தை மின்சார வாரிய அலுவலகங்களில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து செலுத்தும் நிலை உள்ளது. இதனால் நுகர்வோர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது. மின் கட்டணத்தை வங்கிகள் மூலம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. அங்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், வீட்டில் இருந்தே ஆன்–லைனில் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆன்–லைனில் செலுத்தும் வசதி இருந்தாலும் நுகர்வோர் தங்கள் மின்கட்டணம் செலுத்தும் தேதியை மறந்துவிடுகின்றனர். இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதனை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு அவர்களது மின்கட்டண தொகை மற்றும் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகியவை குறுஞ்செய்தியாக அனுப்பப்பட உள்ளது. சில நாட்களில் மறுபடியும் நினைவூட்டும் வகையில் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மின்துண்டிப்பை தடுக்க
இதனால் மின்துண்டிப்பை தடுக்க முடியும். இதற்காக அனைத்து மின்நுகர்வோர்களிடம் இருந்தும் செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களை தெரிவித்துள்ளனர். ஆன்–லைனில் மின்கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்–லைனிலேயே தங்கள் செல்போன் எண்களை தெரிவிக்கலாம். குறுஞ்செய்தி அனுப்புவதற்காக மின்நுகர்வோர்களிடமிருந்து எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மின்சார வாரியமே செல்போன் நிறுவனங்களுக்கான தொகையை செலுத்தும்.
மாநிலம் முழுவதும் விரைவில் 100 சதவீத நுகர்வோர்களின் செல்போன் எண்கள் பெறப்பட்டதும் முதல்–அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார். மின்சார வாரியத்தையும், மின்நுகர்வோர்களையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment