இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில், முஸ்லிம் மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராணுவம் தடையாக இருக்கிறது எனும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடுவிலுள்ள முஸ்லிம் விவசாயிகளே தமது நிலங்களில் நெல் சாகுபடி செய்வதற்கு இராணுவம் தடைகளை ஏற்படுத்துகிறது என்று அங்குள்ளவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.
இராணுவத்தால் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தடைக்கு எதிராகவும், அதனை நீக்கக் கோரியும் இன்று-செவ்வாய்கிழமை அக்கறைப்பற்று பகுதியில் முஸ்லிம் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வட்டமடு பகுதியிலுள்ள முறானாவெட்டி, வேப்பையடிமடு மற்றும் புதுக்கண்டம் ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பல வருடங்களாக தாங்கள் நெல் பயிரிட்டு வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
இம்முறை நீர்ப் பற்றாக்குறை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்வதற்கு அரச தரப்பு அனுமதித்துள்ள போதிலும் அதற்கு இராணுவம் தடை ஏற்படுத்துகிறது என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ஏற்கனவே வட்டமடு பிரதேசத்திலுள்ள நிலங்கள் வனவனபரிபாலன துறைக்குரியது எனக் கூறப்பட்டுள்ள நிலையில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள தங்களுக்கு, தற்போது இராணுவத்தினாலும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் குறித்த பகுதியில் அரசுக்கு சொந்தமான காடுகள் அழிக்கப்படுவதாக, வனத்துறையினால் காவல் துறையிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டதாலேயே இந்நடவடிக்ககை என இராணுவம் கூறுகின்றது.
காடுகள் அழிக்கப்படுவதை பாதுகாப்பதற்கு காவல் துறையினருக்கு இராணுவம் ஒத்துழைப்பு மட்டுமே வழங்குவதாக அதன் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறுகிறார்.
No comments:
Post a Comment