மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை
பயங்கரவாதிகள் வைக்கும் குண்டுகளை விட பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள்தான், அதிகம் குண்டுகளை வைப்பது மட்டுமல்ல அழிவுகளையும் செய்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசு பயங்கரவாதம் இப்படித்தான் அங்கீகாரமற்ற பயங்கரவாதத்தை வைத்து உயிர் வாழ்கிறது.
செப்டம்பர் 11, 2001-ல் நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களின் மீது நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து “நீங்கள் எங்கள் பக்கம் இல்லை என்றால் பயங்கரவாதிகள் பக்கம்தான்” என்று அறிவித்து விட்டு உலக அளவில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா உள்ளிட்டு பல நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வரும் சீனியர் புஷ், ஜூனியர் புஷ், கிளிண்டன், ஒபாமா குழுவினரின் அமெரிக்க அரசுதான் இந்த உலகின் ஆகப்பெரிய பயங்கரவாதி.
இந்த பயங்கரவாதிகள் தமது மேலாதிக்க நோக்கிற்காக உருவாக்கிய அல்கைதா, பின்லேடன் போன்ற குட்டி பயங்கரவாதத்தை வைத்து மக்களிடையே அச்சத்தை ஊட்டி முதலாளிகளின் வயிறு வளர்க்கிறார்கள். அமெரிக்க பயங்கரவாதம் உலகளாவியது என்றால் அந்தந்த நாடுகளில் இத்தகைய ஆளும் வர்க்க பயங்கரவாதங்கள் அளவிலும், வீச்சிலும் குறைவென்றாலும் இருக்கத்தான் செய்கின்றன.
தமிழகத்தின் ஜூனியர் புஷ்-ஆக விரும்பும் இப்போதைய முதல்வர் லேடி அல்லது எதிர்காலத்தில் பிரதமராக விரும்பும் கேடி மோடியை கொம்பு சீவி விடுவதற்கென்றே, கார்ப்பரேட் ஊடகங்களும் அவற்றின் தொழில்முறை பத்திரிகையாளர்களும், சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் என ஒரு பெரும் படையே வேலை செய்து வருகின்றது.
பெங்களூரிலிருந்து கவுகாத்தி செல்லும் காசிரங்கா விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் மே 1-ம் தேதி காலை 7.15-க்கு நுழைந்தது . சில நிமிடங்களுக்குள் S-4, மற்றும் S-5 பெட்டிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் சுவாதி என்ற 24 வயது கணிணி பொறியாளர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 14 பேர் காயமடைந்தனர். ஒரு குண்டு வெடிப்பில் ஒரு அப்பாவி இளம்பெண் இறந்ததற்கு வருந்துவதும், அந்த வருத்தத்தையே இசுலாமியர்களை கொல்ல வேண்டும் என்று வெறியாக திருப்புவதும் ஒன்றல்ல.
அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்த குண்டு வெடிப்பிற்கு நிகரான பயங்கரவாதச் செயலை குண்டு இல்லாமலே இணையத்தில் நடத்தினார் ஒரு ஆசாமி. யார் அவர்? கிழக்கு பதிப்பகத்தில் குப்பை கொட்டிக் கொண்டும், தனது உடலில் டன் கணக்கில் பார்ப்பனக் கொழுப்பையும் ஏற்றிக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் குண்டர் ஹரன் பிரசன்னாதான் அந்த நபர். சரியாக 8.24 மணிக்கு இது குறித்த அவரது பேஸ்புக் நிலைத்தகவல் வெளியாகிறது. அதற்குள் தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்து, தகவல்களை திரட்டி, தீர்ப்பு எழுதியிருந்தார் அந்த இந்துமதவெறியர். ஆறு பேர் மரணம் என்று கேள்விக் குறியுடன் வாந்தி எடுத்திருந்தார் இவர்.
அவரது நோக்கம் குண்டு வைத்தவர்களின் நோக்கத்துக்கு இணையானதுதான், அப்பாவி மக்களை அச்சுறுத்துவதும், முடிந்த மட்டும் உயிர்ப்பலி நடத்துவதும்தான்.
சென்னை சென்ட்ரலில் குண்டுவெடி ப்பு. ஆறுபேர் மரணம்? (மரணம் உறுதிசெய்யப்படவில்லை.). ( பதட்டமாக உள்ளது. ஜெயலலிதாவின் கையாலாகத்தனம் இது . பயங்கரவாதிகள் எந்த வகையில் வந் தாலும்அதை வேரறுக்கவேண்டிய அரசு , அவர்களின் வால் பிடித்தால் இப் படித்தான் நடக்கும். Innocence of Muslims, விஸ்வரூபம், தலைவா படப் பிரச்சினையின்போதே அ ரசு தீர்க்கமான முடிவுகளை எடுக் கவில்லை. தனது அரசியலுக்காக அதை ஜெயலலிதா பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் ஒரே பிளஸ்பாயிண்ட் டும் இந்த ஆட்சியில் கோவிந்தா. இனியாவது அவர் விழித்துக்கொள் ளவில்லை என்றால், ஒட்டுமொத்த டாட்டா பைபைதான்.
- முகநூலில் ஹரன் பிரசன்னா.
அதாவது தன் சார்பாகவும் தனது பாசிச பார்ப்பனிய இயக்கத்தின் சார்பாகவும் செயல்படும் அரசாங்கம், சிறுபான்மை முசுலீம் மக்கள் மீது, அரச பயங்கரவாத செயல்களை நிகழ்த்த கருத்து உருவாக்கம் செய்கிறார் ஹரன் பிரசன்னா. மேற்கண்ட இரண்டு திரைப்படங்கள் தொடர்பாக இசுலாமிய மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை அனுமதிக்காமல், தடியடி, துப்பாக்கிச் சூடு, கைது, தூக்கு, போலி என்கவுண்டர், நாடுகடத்தல் என்று ஒடுக்கியிருந்தால் இப்போது குண்டு வெடித்திருக்காதாம். ஒரு குண்டு வெடித்து அழுகுரல் ஓய்வதற்குள் ஒரு ஆர்.எஸ்.எஸ் ‘குண்டு’ வெறியன் எப்படி ஆடுகிறார் பாருங்கள்!
இந்த நிலைத்தகவலின் பின்னூட்டங்களில் ஹரன் பிரசன்னாவை கண்டித்து வாதாடியவர் தமிழகத்தின் ‘மூத்த பத்திரிகையாளர்’ மாலன். அப்படி என்ன கண்டித்தார்? அதாவது குண்டு வெடித்து இரண்டு மணிநேரத்திற்குள் இதற்கு முதலமைச்சர்தான் பொறுப்பு என்று பேசுவது சரியா என்பதே மாலனது கேள்வி. இதே கேள்வியைத்தான் துக்ளக்கிலும் சோ கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதே சோ மற்றும் மாலனது ஆதங்கம். ஒரு நூல் இன்னொரு நூலை விட்டுக் கொடுக்காது என்ற நூல் விதிப்படி இது இயல்பான ஒரு நூல்தான். இவ்வளவிற்கும் ஹரன் பிரசன்னா ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்கவில்லை. முசுலீம்களை ஒடுக்குவதில் மட்டும் அவர் அசால்ட்டாக இருக்கிறார் என்பதே இந்த இந்துமதவெறிக் குண்டனது ஆதங்கம்.
ஹரன் பிரசன்னா பதிவில் ஒட்டுமொத்த இசுலாமிய மக்கள் இழிவு படுத்தப்படுவதை விட ஜெயலலிதாவுக்கு கெட்டபெயர் வருவதை மாலனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஆனால் இதே குண்டு வெடிப்பு கருணாநிதி ஆட்சியில் நடந்திருந்தால் இந்த நூல்கள் நாவலே எழுதி கண்டித்து கிழித்திருக்கும்.
அந்த பயத்தில்தான் கருணா நிதி இப்போது ஆட்சியில் இல்லை என்றாலும் குண்டு வெடிப்பிற்கு காரணமாக இலங்கை ஜாஹீர் ஹூசைனை கைது செய்து சரியாக விசாரிக்காததே என்று ஒரு அறிக்கையே விட்டு விட்டார். ஆட்சியில் இல்லை என்றாலும் அக்ரஹாரத்தின் ஆசிர்வாதம் இல்லை என்றால் தொழில் நடத்த முடியாது எனும் கருணாநிதியின் பயமே இந்த அறிக்கையின் பின்னணி. இதை ஃபேஸ்புக்கில் கொஞ்சம் தைரியமாக கண்டித்த விடுதலை சிறுத்தைகளின் ஆளூர் ஷாநவாசை உடன்பிறப்புகள் உண்டு இல்லை என்று பிய்த்து உதறி விட்டனர். அதிலும் அபி அப்பா போன்ற உ.பிறப்புகள், “இனி எந்தக்காலத்திலும் ஷாநாவாசிற்கு திமுக கூட்டணியில் தொகுதி கிடைக்கவே கிடைக்காது” என்று மிரட்டுமளவு சென்றுவிட்டனர். திமுகவில் யாருக்கு சீட்டு கிடைக்கும் என்பது இந்த தேர்தலில் விருதுநகர், திருநெல்வேலி போன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கேட்டால் சொல்வார்கள் – கோடிஸ்வரர்களுக்கு மட்டும்தான் என்று.
இனி ஆளுர் ஷாநவாஸ் இந்த உடன்பிறப்புகளின் மனம் கோணாமலும், மார்க்க சகோதரர்களின் அவலங்களை பேச முடியாமலும் போகலாம். மீறி உண்மைகளை பேச வேண்டுமென்றால், அதற்கு ஓட்டுக் கட்சி அரசியல் பொருத்தமா, புரட்சிகர அரசியல் பொருத்தமா என்று அவர் பரிசீலிப்பாரா, தெரியவில்லை. போகட்டும், நாம் இப்போது மாலனுக்கு திரும்புவோம்.
1980-களில் திசைகள் இதழ் நடத்தியது முதல் இன்று புதிய தலைமுறை நடத்துவது வரை இடையில் குமுதம், குங்குமம், தமிழ் இந்தியா டுடே என்று பல இதழ்களில், இளைஞர்களுக்காக அரசவைக் கோமாளி அப்துல் கலாம் டைப்பில் மொக்கை உபதேசங்கள் போட்டு ‘சமூக சேவை’ செய்தவர் இந்த மாலன். சன் நியூஸ் தொலைக்காட்சி சேனலிலும் பரபரப்பாக பணியாற்றியவர். மாலனின் பார்ப்பனிய இந்துத்துவ கண்ணோட்டம் என்பது அருண் ஜெட்லி, காலம் சென்ற பிரமோத் மகாஜன் போன்ற லிபரல் வலதுசாரிகளின் மாடர்ன் காவி கலர் குழுவில் பொருந்தக் கூடியது. சில நேரம் சேது சமுத்திர திட்டத்தை, இந்து மத நம்பிக்கை அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என்று அம்மணமாகவும் வாதாடக் கூடியது. அப்போது லிபரல் போய், முழுக்காவி ஜட்டியில் இந்த மாலன் ஒரு சூப்பர் மேனாக தோன்றுவார்.
இப்பேற்பட்ட மாலன், மே 15, 2014 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் தனது ‘குண்டு வெடிப்பை’ நிகழ்த்தியிருக்கிறார். ஒரு வாரம் முன்பு ஹரன் பிரசன்னாவிடம் வாதிட்ட மாலனது புரட்சித் தலைவி போற்றி அறம் இப்போதும் அதையே வேறு முறையில் செய்கிறது. அதாவது முசுலீம் பயங்கரவாதத்துக்கு எதிராக எழுதி உம்மாவை பலி கொடுத்தால் அம்மாவை காப்பாற்றலாமாம். அதே பணியை காக்கி சட்டை போட்டு செய்யும் காவல் துறை கிளப்பிவிடும் கட்டுக்கதைகளின் அடிப்படையில் கட்டுரை எழுதுகிறார் மாலன்.
மேலும் இப்படி அம்மாவை காப்பாற்றுவதோடு மாலனுக்கு இப்போது படியளக்கும் பகவான் பச்சமுத்து பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பதால் அந்த வகையிலும் இந்த குண்டு பயங்கரவாத அரசியல் தேவைப்படுகிறது.
‘உழைப்பாளர் தின விடுமுறையை சோம்பலுடன் தொலைக்காட்சி பார்த்துக் கழிக்கலாம் என்ற டிவிப் பெட்டியை திறந்தவர்களுக்கு அதிகாலையிலேயே’ அதிர்ச்சி காத்திருந்ததாம். கட்டுரையை ஆரம்பிக்கும் போதே மாலன், நாராயணா, நாராயணா என்று உழைப்பாளர் தினத்தை போராட்டமாக எதிர் கொள்ளக் கூடாது என மக்கள் கருத்தாக உவமை போடுகிறார்.
அன்றைக்கு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது. இல்லாவிடில் குண்டு ஆந்திரத்தில் வெடித்திருக்கும். அதாவது திட்டமிட்ட கூடுர் ரயில் நிலையம் திருப்பதிக்கு அருகில் இருக்கிறதாம். அங்கு மோடி வருவதால் அவரை பார்க்க வருபவர்களை பீதியூட்டவே குண்டு வைத்திருப்பதாக பீதி கிளப்புகிறார். மேலும், கூடூர் அருகில் ரயில் ஓடிக் கொண்டிருந்த போது குண்டு வெடித்திருந்தால் அப்பாவி மக்களின் உயிர்ச்சேதம் அதிகமாகியிருக்குமாம். அப்படி நடக்கவில்லை என்று கடவுளுக்கு நன்றியும் சொல்லிக் கொள்கிறார். சரி, இப்படி புலனாய்வு புலி போல எழுதுவதற்கு என்ன ஆதாரம்? ஆதாரங்களை விட மோடிக்கு கொடி பிடித்தால் பச்ச முத்துவுக்கு மனது குளிரும் என்ற ஆதாயமே மாலனுக்கு முக்கியம்.
கிழக்கு பதிப்பகத்தில் டவுன்லோடு பல்ப் பிக்ஷன்களையே இசுலாமிய பயங்கரவாதமாக கதை சொன்ன பா.ராகவன் போல கதை சொல்கிறார் மாலன். சென்னை ரயில்குண்டு வெடிப்பின் பின் இருக்கும் மர்மங்களையெல்லாம் ஒரு திரைப்படம் போல விளக்குகிறார். மும்பை தாக்குதலுக்கு பிறகு மேற்கு கடற்கரைகளில் இந்தியா தனது பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தி விடவே பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தற்போது தமிழகத்தின் கிழக்கு கடற்கரையை குறி வைத்திருப்பதாகவும், வட மாநிலத்து இளைஞர்களை மூளை சலவை செய்து அனுப்பினாலும் உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடுவதாலும், இலங்கை தமிழ் முசுலீம்களை மூளைச்சலவை செய்து தமிழகத்திற்குள் அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.
சரி இப்படி ஒரு உலக அரசியலை கற்றுத் தேர்ந்த மேதை தான் எழுதுவதற்கு ஒரு தர்க்கமோ இல்லை தரமோ இருக்க வேண்டும் என்று நினைக்க வில்லை போலும். தற்போது இலங்கையில் ராஜபக்ஷே தலைமையிலான சிங்கள இனவெறி அங்குள்ள இசுலாமிய மக்களை குறிவைத்து தாக்கி வருகிறது. அங்கேயே பல்வேறு மிரட்டல்களை எதிர்கொள்ளும் இசுலாமிய மக்களிடமிருந்து பக்கத்து தமிழ்நாட்டில் பயங்கரவாதம் செய்ய ஏதோ டூர் போவது போல வருகிறார்கள் என்றால் இது என்ன விசுவரூபம் திரைக்கதையா?
மேலும் இவர்கள் சொல்வது போல ‘இசுலாமிய’ பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியிலிருந்து மட்டுமே வருகிறது. அதை மதத்துடன் மட்டும் இணைத்து பார்ப்பது அறிவீனம். காஷ்மீரில் தனது குடும்பத்தினரை இந்திய ராணுவத்திற்கு பலி கொடுக்கும் ஒரு இளைஞன், பழி வாங்க தனது உயிரை கொடுப்பது போல, மற்ற மாநிலங்களில் உள்ள முசுலீம்கள் மதமென்ற முறையில் வருந்தினாலும் உயிரைக் கொடுப்பது சாத்தியமற்றது. இது எல்லா போராட்டங்களுக்கும் பொருந்தக் கூடியது. இந்தியாவில் இந்துமதவெறியர்களை ஜனநாயக முறையில் தண்டிக்க முடியாது என்பதை அவர்களது கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் மட்டுமே குண்டு வைப்பதற்கான மன எழுச்சியை பெற முடியும். ஆகவே இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்து குண்டு வைப்பது என்ற கருத்தே எந்த அடிப்படையிலும் சாத்தியமற்றதே.
ஆனால் இலங்கையை பௌத்த நாடு என்ற முறையில் அகண்ட பாரதத்தில் முடிந்து வைத்திருக்கும் இந்துமதவெறியர்கள் ராஜபக்சேவுடன் இயல்பான நட்பில்தான் இருக்கிறார்கள். எனவே இத்தகைய பூச்சாண்டியை கிளப்பி விட்டால் அதை நிரூபிப்பதற்கு ராஜபக்சேவும் உதவி செய்யலாம். கூடுதலாக இலங்கை தமிழ் முசுலீம்கள் மத்தியில் ஒரு இனப்படுகொலையை நடத்துவதற்கான நியாயத்தை வழங்குவதோடு, தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறை சட்டங்கள் நிறைவேற்றுவதற்குமான ஆதரவையும் விதைப்பதில் மாலன் முன்னோடியாக நிற்கிறார்.
பீகார் குண்டுவெடிப்பின் போது சிக்கிய இமிதாஸ் அன்சாரி என்ற தீவிரவாதி இதனை ஒப்புக் கொண்டாராம். அப்புறம் ஒரே மாதிரியான குண்டு என்ற கணக்கீட்டுடன், இந்தியன் முகாஜிதீன் கதைகளையும் கனகச்சிதமாக எழுதி உள்ளனர். அடுத்து குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் கைதான ஜாகிர் உசேன் திருச்சி சிறையில் முன்னர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி இருந்த போது அங்கிருந்த தமீம் அன்சாரியுடன் தொடர்பிருந்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறதாம். இப்படி மாலன் பயங்கரமாக ஆய்வு செய்து எழுதுகிறார்.
இந்த ஆய்வின் இலட்சணம் என்ன?
2012 செப்டம்பரில் தமீம் அன்சாரி என்ற வெங்காய வியாபாரியை தீவிரவாதி எனக் கைது செய்தது போலீசு.
தமீம் அன்சாரி மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளார். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை.
அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம். செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. (அ மார்க்சின் பேஸ்புக் நிலைத்தகவல்)
இப்படி பல கட்டுக்கதைகளும் சோடிக்கப்பட்ட அம்மா போலீசின் வழக்கை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து தமீம் அன்சாரியை விடுதலை செய்தது. ஆனால் அன்சாரி விடுதலை ஆவதற்கு முன்னாடியே இந்த வழக்கு போலியானது என்று வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம்.
இப்போது கட்டுரை எழுதும் மாலனோ “ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை, ஊகத்தின் பேரில் காவல்துறை செயல்பட்டுள்ளது என மதுரை உயர்நீதி மன்றக் கிளை அவரை விடுதலை செய்தது” என்று கூறி விட்டு தொடர்ந்து, “தமீம் அன்சாரி மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அவர் ஆறு மாதங்களில் ஐந்து முறை இலங்கை சென்றதாகவும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது” என்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட போலீஸ் கூறும் கதையை தனது பயங்கரவாத பிரச்சாரத்துக்காக அவிழ்த்து விடுகிறார்.
முடிவாக இரண்டு எச்சரிக்கைகளை விடுக்கிறார் மாலன். ஒன்று இலங்கையை பாகிஸ்தான் உளவு அமைப்பு தனது துணைக் கேந்திர மையமாக பயன்படுத்துகிறது. இரண்டு, மதம் என்ற பெயரால் தமிழர்களை மூளைச்சலவை செய்து தனது பயங்கரவாத திட்டங்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே மாலன் முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு குறிப்பிட்டாலும் அந்த தமிழர்கள் முசுலீம்கள் மட்டும்தான். ஏன் அவர்களை இந்தியர்கள் என்று குறிப்பிடவில்லை? இந்து இந்தியாவுக்கு முசுலீம்கள் மட்டுமல்ல, தமிழர்களும் பிடிக்காது என்பது இங்கே மதச்சார்பற்ற பத்தியம் இருக்கும் மாலனிடமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இப்படி மதச்சார்பின்மை வேடத்தை போடத்தெரியாமல் மாலன் போட்டாலும் அவரது வார்த்தைகளில் அப்பட்டமாக இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பு வெளிப்படுகிறது.
மூளைச் சலவை செய்யப்பட்டு ஒருவர் தனது உயிரை கொடுக்க முடியும் என்று மாலன் முதல் அமெரிக்க காலன்கள் வரை திரும்ப திரும்ப ஓதுவதில் ஒடுக்கப்படும் மக்கள் மீதான ஒரு மேட்டிமைத்தனமும், இகழ்ச்சியும் அடங்கியிருக்கிறது. ஏற்கனவே கூறியது போல பாலஸ்தீனத்தில் ஒரு இசுலாமிய பெண் தனது உயிரை பணயம் வைத்து இசுரேல் மீது தாக்குதல் நடத்துகிறாள் என்றால் அதற்கு பாரிய சமூக அரசியல் காரணங்கள் உள்ளன. அந்த நியாயங்களுக்கு பதில் சொல்லாதவரை, இந்த குண்டுகளை யாரும் தடுக்க முடியாது. அதை ஏதோ படிப்பறிவு அற்ற ஏழை முசுலீம் மரணத்திற்கு பிந்தைய மதத்தின் சொர்க்க வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்கிறான் என்பது வன்மமும் முட்டாள்தனமும் நிறைந்த கருத்து. இதையே திருப்பிக் கேட்டால் மேற்கண்ட பார்ப்பனக் கொழுப்பு ஆர்.எஸ்.எஸ் குண்டர் ஹரன் பிரசன்னா தனது உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் இராணுவத்தின் மேல் குண்டுடன் பாய்வாரா? இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பாரதமாதாவை கடாசி விட்டு பதறி ஓடிவிடுவார்.
மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை.
குண்டு வெடித்த நாளில் ரயில் நின்றவுடன் இறங்கி அவசர அவசரமாக ஓடிய ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு “இதோ பிடித்து விட்டோம் தீவிரவாதியை” என்று தலைப்புச் செய்திகள் தீட்டினார்கள். மதுரையில் அத்வானியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பெங்களூரு பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பாட்னாவில் மோடியை குறிவைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், சென்னையில் இப்போது வெடித்துள்ள குண்டிலும் கன் பவுடருடன் அம்மோனியம் நைட்ரேட் கலந்து தான் தயாரித்துள்ளனர் என்றும், எனவே ஒரே டீம்தான் செய்திருக்கும் என்றனர்; தற்போது இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரில் செயல்படும் அமைப்பினர்தான் இதனை நடத்தியிருப்பதாக செய்தி பரப்பினர்; அந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களான யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் கைதான பிறகு தற்போது இந்த அமைப்பை வழி நடத்துபவன் அபுபக்கர் சித்திக் என்றும், அவன்தான் சென்னை குண்டு வெடிப்பதற்கு முன் 9 வது பிளாட்ஃபார்மில் ஓடுபவன் என்றும் கதை கட்டியது நக்கீரன் புலனாய்வு பத்திரிகை.
இதில் அல் உம்மா எனும் அக்மார்க் தமிழ் முசுலீம் குழுவை நாடு கடத்தி ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் இந்திய முஜாகிதீன் அமைப்பாக மாறியதாக கூசாமல் பொய் பேசுகிறது நக்கீரன்.
போலீஸ் பக்ரூதின் குழுவிடம் விசாரித்த போது அபுபக்கர் சித்திக்தான் அடுத்த தலைவன், என்றும், தற்போது கடத்தி வரப்பட்ட 100 கிலோ வெடிமருந்தில் 50 கிலோ மீதியிருப்பதாகவும், இது ஒரு ஒத்திகைதான் என்றும், மோடி ஆட்சிக்கு வந்து இசுலாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் பதிலடி கொடுக்க தயராக இருப்பதாகவும் கதை கட்டினார்கள். ஏற்கெனவே பிடிபட்டவர்கள் மூலமாக மீதியுள்ள வெடிமருந்துகளை கைப்பற்றியிருக்கலாமே என நக்கீரன் தரப்பில் கேட்டதற்கு அதிகாரிகள் ” அது ஒரு பெரிய டீம், அந்த டீமிற்குள் சின்ன சின்ன டீம்கள் நிறைந்திருக்கும். ஒரு டீமில் இருப்பவர்களும் இன்னொரு டீமில் இருப்பவர்களும் எந்தவித தொடர்பிலும் இருக்க மாட்டார்கள். எல்லா டீம்களையும் இணைத்திருக்கும் அபுபக்கர் சித்திக் பிடிபட்டால் மட்டுமே எங்கெங்கே எவ்வளவு வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருக்கிறது? எங்கெங்கே யார் யார் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்ள முடியும்” என்றார்களாம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இருக்கும் அபுபக்கர் சித்திக் பற்றி அந்த அதிகாரி ”அபுபக்கர் சித்திக் தனது ஆட்கள் மூலம் நடத்தும் டேஞ்சரஸ் ஆபரேஷ்ன்களின்போது அருகே ஸ்பாட்டில் இருந்து அதை கண்காணிக்க கூடியவன். ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி மர்டரின்போது அபுபக்கர் சித்திக் ஸ்பாட்டில் இருந்திருக்கிறான். அதே போல பெங்களூரு, பாட்னா போன்ற குண்டுவெடிப்புகளின் போதும் ஸ்பாட்டில் இருந்திருக்கிறான். எனவே கௌகாத்தி ரயில் குண்டுவெடிப்பிலும் அவன் ஸ்பாட்டில் இருந்திருக்கலாம். அவனது தற்போதைய புகைப்படம் எங்களிடம் இல்லாத்தால் அவன் அலட்சியமாக தப்பிச் செல்கிறான். போலீஸ் பக்ரூதின் டீமிடம் விசாரித்த வகையில் அபுபக்கர் சித்திக் 6 அடி உயரம் கொண்டவன். வழுக்கை தலையுடன் இருப்பவன். பளீரென்று ஹெடெக் ஆசாமியாக உலவுகிறவன். ரயிலில் இருந்து அவசரமாக ஓடுபவன் சித்திக்காகத்தான் இருக்க வேண்டும். விரைவில் அவனை மடக்கி விடுவோம்” என்றாராம்.
கடைசியில் பார்த்தால் அன்று ஓடியவர் கேரளாவை சேர்ந்த ஐடி பொறியாளர் என்றும், அன்று விடுமுறைக்காக இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த அவர் ரயில் தாமதமானதால் விமானத்தை பிடிக்க ஓடியிருப்பதும் தற்போது வெளியாகவே இப்போது அவரை அப்பாவி என்கிறது சிபிசிஐடி. கதை எழுதிய போது அபுபக்கர் எப்போதும் அசைன்மெண்ட் நடக்கும்போது ஸ்பாட்டில் இருப்பார் என்று நக்கீரன் கூறிய கதை எல்லாம் புஸ்வாணமானதுதான் மிச்சம். ஆனால் இந்த புஸ்வாணம் இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பிலிருந்தும், பொது வாசகரிடம் இருக்கும் இந்துத்துவ உளவியலை திருப்தி செய்யும் மோசடியான ஊடக தர்மத்திலிருந்தும் வெளிப்படுகிறது.
குண்டுவெடிப்புக்கு முந்தைய தினம்தான் இலங்கை கண்டியை சேர்ந்த வியாபாரி ஜாகிர் உசேன் என்பவரை தீவிரவாதி என்று சொல்லி க்யூ பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். இந்தியாவினுள் ஊடுருவதற்கு இலங்கையை பயன்படுத்த முடிவு செய்த பாகிஸ்தான் உளவுத் துறை அங்குள்ள முஸ்லீம்களுக்கு பயிற்சி கொடுத்து தமிழ்நாட்டுக்கு அனுப்புவதாக கிளப்பி விட்டன பத்திரிகைகள்.
ஜாகிர் உசேன் குறித்து தற்போதும் ஊடகங்களில் புதிது புதிதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவற்றில் தனிப்பட்ட கிரிமனல் குற்றங்களை தவிர்த்து அவர் பாக் உளவாளி என்று இவர்கள் கூறும் காரணங்கள் எந்த வித அடிப்படையற்றும் இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே மேலே எழுதியிருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்.
இவரைப் போலவே இன்னும் 25 பேரை ட்ரெயின் பண்ணி தமிழகத்தில் ஐஎஸ்ஐ இறக்கி விட்டிருப்பதாக உசேன் விசாரணையில் கூறியதாக கிளப்பி விட்டிருக்கிறது ஜூவி. மோடியின் குட்புக்கில் ஏற்கனவே இடம்பிடித்து விட்டாலும் இனி சூப்பர் குட் புக்கை நோக்கி போக வேண்டும் என்பதால் ஜுவியின் இந்த வேகம் புரிந்து கொள்ளக் கூடியதே.
போலீசால் சோடிக்கப்பட்ட பொய் வழக்கில் சிறையில் இருந்த தமீம் அன்சாரியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஜாகிர் உசைன் தீவிரவாதி என்று போலீசும் ஊடகப் புலிகளும் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் தமீம் அன்சாரியை குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. ஜாகிர் உசைனும் அப்படி விடுதலை ஆகிவிட்டால், பெயர் கெட்டுப் போகும் என்பதால் போலி மோதலில் சுட்டுக் கொல்லலாமா என்று இப்போது அம்மா போலிசு ஆலோசித்து வந்தாலும் வரலாம். அப்படி வரவில்லை என்றாலும் மாலன், ஜூவி போன்ற அக்மார்க் பார்ப்பன ஊடகங்கள் அதை இலக்கிய நயத்துடன் எடுத்துக் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.
விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் முதலில், கவுகாத்தி போகும் ரயிலில் ஜோலார்பேட்டை, காட்பாடியில் ஏறியவர்களை சந்தேகப்பட்டார்கள். முன்பதிவு செய்யாத பயணசீட்டு எடுத்து விட்டு முன்பதிவு செய்த பெட்டியில் பயணித்தவர்கள்தான் காரணம் என்றார்கள். அப்போது பேசப்பட்ட செல்பேசி அழைப்புகளை ஆராய்ந்தார்கள். பெங்களூருவில் தட்கலில் பதிவு செய்தவர்கள் கொடுத்த ஆதாரங்கள் போலியானவை என்ற ரீதியில் விசாரணையை நீட்டித்தார்கள். குற்றவாளியை நெருங்கி விட்டதாக அடுத்து தகவல்களை காவல்துறையினர் கசிய விட்டனர்.
இப்போது குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து துப்பு எதுவும் துலங்கவில்லை என்றும் தகவல் கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு எனவும் கூறியிருக்கின்றனர். கடைசியில் எல்லா திரைக்கதைகளும் முதல் காட்சி முடிவதற்குள்ளேயே டப்பாவிற்குள் போய்விட்டன.
குண்டு என்றால் அது முசுலீம்தான் வைக்க வேண்டுமென்று நம்பாதீர்கள் என அசீமனாந்தாவே இப்படி ஆதார பூர்வமாக கூறிவிட்ட பின்னரும் ஊடகங்கள் இப்படித்தான் இந்துமதவெறியுடன் எழுதுகின்றன. இதே வேகமும் கற்பனையும் ஆர்.எஸ்.எஸ் நடத்திய குண்டு வெடிப்புகளில் இவர்கள் காட்டுவதில்லை. ஒரு சமூக குற்றத்தை உள்ளது உள்ளபடியும் அதே நேரம் சமூக நல்லிணக்கத்தை நோக்கியும் இருக்க வேண்டும் என்பது இவர்களது நோக்கமல்ல.
இதனால் இந்த குண்டுவெடிப்பு யாரால் நடத்தப்பட்டிருக்கும், அல்லது படவில்லை என்ற கேள்விக்கு வினவு பதிலளிக்கவில்லை. ஏனெனில் அது குறித்து இன்னும் நமக்கு போதிய தகவல்கள் ஆதாரங்களுடன் தெரியவரவில்லை. இது இந்துமதவெறியர்கள் மோடியின் இமேஜைக் கூட்டுவதற்காக வைத்திருக்கலாம் என்று சிலர் கருதினாலும் அப்படி குண்டு வைத்து வெற்றி பெற வேண்டிய பலவீனமான நிலையில் பாஜக இல்லை. அல்லது எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதோ சில திறை மறைவு இந்துமதவெறிய இயக்கங்கள் இதை பாஜகவின் நலனுக்காகவும் செய்திருக்கலாம். அல்லது, இந்துமதவெறியர்களின் கலவரங்களால் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பறிகொடுத்த சில இசுலாமிய இளைஞர்கள் கூட வைத்திருக்கலாம். ஆனால் அது தற்கொலைப் பாதை என்பதையும் அதன் மூலம் இந்துமதவெறியை வீழ்த்த முடியாது, முசுலீம் மக்களுக்கு மேலும் துன்பத்தையே இத்தகைய குண்டு வெடிப்புகள் கொண்டு வரும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. எப்படியிருப்பினும் இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டிக்கிறோம்.
இந்துக்களோ இல்லை முசுலீம்களோ உழைக்கும் மக்கள் என்ற வகையில் அணிதிரண்டு போராடுவதன் மூலமும், அந்த போராட்டத்தின் மூலம் இந்துமதவெறியை வீழ்த்துவதே இத்தகைய குண்டுவெடிப்புகளிலிருந்து மக்களை காக்கும்.
இந்த முயற்சி நடக்க கூடாது என்பதற்கே தமிழ் ஊடகங்களும், மாலன் போன்ற அறிஞர்களும்தான் இசுலாமிய பயங்கரவாதம் குறித்து தமிழ் மக்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். விதிகளையும், நீதிகளையும் வகுக்கிறார்கள். பார்ப்பன இந்துமதவெறி தமிழகத்தில் காலூன்றி விட்டது என்பதற்கு மோடி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. புதிய தலைமுறை, நக்கீரன், ஜூவி போன்ற பத்திரிகைகளின் கருத்துக்களை கவனித்தாலே போதும்.
தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவதற்கு நாம் இன்னும் அதிகம் போராட வேண்டும். போராடு.........
No comments:
Post a Comment