கர்ணூல்: ஆந்திராவில் இறந்த வேட்பாளருக்கு வாக்களித்த மக்கள் அவரை 47ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது. இதனால் அத்தொகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைகளுக்கான தேர்தலும் நடந்தது. அலகட்டா சட்டசபை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் சோபா நாகி ரெட்டி என்பவர் போட்டியிட்டார். ஆனால் வாக்குப்பதிவுக்கு சில தினங்கள் முன்பு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பெருவாரியான கிராம மக்கள் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஒய்எஸ்ஆரர் காங்கிரஸ் பதிவு செய்யப்பட்ட கட்சி என்றவோதிலும், அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் நிறுத்தவில்லை. குறிப்பிட்ட நாளில் வாக்கு பதிவு நடந்தது. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆச்சரியப்படத்தக்க வகையில் இறந்துபோன சோபா நாகி ரெட்டிதான் 47 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இறந்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க கூடாது என்பது விதிமுறை என்பதால் தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சோபா நாகி ரெட்டி மீதான அபிமானத்தால்,
அவருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த வாக்கு செல்லாது என்று தெரிந்திருந்தும் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைத்து வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் என்ன செய்ய என தெரியாமல் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு முன்பே இறந்துவிட்ட ஒரு வேட்பாளர், தேர்தலில் வெற்றிபெறுவது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுதான் முதன்முறையாக கூறப்படுகிறது. இது அந்த வேட்பாளர் மீது மக்கள் வைத்திருந்த மிகப்பெரிய அன்பை காண்பிக்கிறது. இத்தொகுதியில் மறுதேர்தல் நடக்கும்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, சோபா நாகி ரெட்டி குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இறந்த வேட்பாளரிடம் தோல்வியடைந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கங்குலா பிரபாகர் ரெட்டி மீண்டும் போட்டியிட உள்ளார்.
No comments:
Post a Comment