லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுடன் பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கான தொடக்க நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக, இடதுசாரிகளுடன் இணைந்து கொண்டது.
அதிமுகவுடன் கூட்டணி அமைந்த நிலையில், ஜெயலலிதாவை மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றும் இடதுசாரிகள் அறிவித்திருந்தனர்.
ஆனால் லோக்சபா தேர்தல் பணிகள் மும்முரமடைந்த நிலையில் திடீரென இடதுசாரிகளைக் கூட்டணியில் இருந்தே அதிமுக வெளியேற்றிவிட்டது. அத்துடன் தமது தேர்தல் பிரசாரத்தின் போதும் தொடக்கத்தில் பாஜக, அதன் பிரதமர் வேட்பாளர் பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் முதல்வர் ஜெயலலிதா வைக்காமல் இருந்தார்.
மேலும் ஜெயலலிதா தமது பிரசாரத்தில் “அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு” என்று கூறி தாம் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்பதை வெளிப்படுத்தினார். இதனால் தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக பாஜகவுடன் அதிமுக கை கோர்க்கும் என்று கூறப்பட்டது.
இதையே தேர்தல் பிரசார களத்தில் திமுக, இடதுசாரிகளும் முன்வைக்கத் தொடங்கினர். இதனாலேயே அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்திருந்த தவ்ஹீத் ஜமாத் திடீரென ஆதரவையும் விலக்கிக் கொண்டு திமுகவை ஆதரித்தது.
இதன் பின்னர் காங்கிரஸ், பாஜக இரண்டையுமே பிடிபிடியென பிடித்து வெளுத்து வாங்கினார் ஜெயலலிதா. இதில் உச்சமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரிடையாகவே தாக்கியும் பேசினார் ஜெயலலிதா. குஜராத்தின் மோடியைவிட இந்த தமிழகத்தின் லேடிதான் பெஸ்ட் என்றும் விமர்சித்தார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக எக்ஸிட் போல்கள் அனைத்தும் பாஜகதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகின்றன. தமிழகத்திலும் அதிமுகதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன.
இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தனித்து ஆட்சி அமைக்க முடியாது போனால் அதிமுக ஆதரவைக் கோர பாஜக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஜெயலலிதாவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அதிமுகவும் க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக தெரிகிறது. ஒருவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணி தனித்தே ஆட்சி அமைத்தாலும் அதிமுகவையும் அரசில் அங்கம் பெற வைக்கவும் பாஜக முனைப்பு காட்டுகிறது. இது குறித்தும் அதிமுகவுடன் தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் பேச இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுகவின் முன்னாள் எம்.பி, மலைச்சாமி இன்று கருத்து தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் நல்ல நண்பர் நரேந்திர மோடி. அரசியல் நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருக்கலாம்.. மோடி பிரதமரானால் நல்லுறவுடன் இருக்கவே ஜெயலலிதா விரும்புவார் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment