Latest News

பெண் காவலர் மர்ம மரணம் – சி.பி.ஐ விசாரணை வேண்டி கோரிக்கை!


பெண் ஆயுதப்படை காவலர் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்பெண்ணின் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகில் உள்ள கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது மகள் ஷர்மிளா பானு(21). இவர் சென்னையில் ஆயுதப் படை காவலராக பணிபுரிந்துவந்தார்.

சிக்கந்தருக்கு கடந்த 15-ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். உடனடியாக வந்து பாருங்கள் என்று கூறியுள்ளனர்.

சிக்கந்தர் தனது மனைவி அம்மாபொன்னு மற்றும் உறவினர்களுடன் சென்னைக்கு சென்று பார்த்தபோது தனியார் ஆஸ்பத்திரி ஒன்றை கூறியுள்ளனர். அங்கு தனது மகள் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அங்கு ஷார்மிளா பானு இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு பெற்றோரிடம் கையெழுத்து பெற்று அவரது உடலை கோட்டையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அடுத்த நாள் அதிகாலை கொண்டு வந்து இறக்கிவிட்டு செலவுக்கு ரூ.15 ஆயிரம் கொடுத்து விட்டு சென்றனர்.

ஆனால் சிக்கந்தர் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதால் அவரை யாரேணும் கொலை செய்திருக்கலாம். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி நத்தம் போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.

இதனைத் தொடரந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பதில் உடனே கிடைக்கவில்லை என்று நத்தம் பஸ் நிலையம் ரவுண்டானா சந்திப்பில் திடீர் மறியலில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆயுதபடை போலீசார்களும் நத்தம் போலீசார்களும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். சுமார் 2மணிநேரம் நடந்த மறியலில் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் அந்தப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன. மேலும் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து வழித்தடங்களும் தடைகள் வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நிலைமை முடிவுக்கு வராமல் போகவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் துணை சூப்பிரண்டுகள் வனிதா, ராமச்சந்திரன், ஜானகிராமன் மற்றும் போலீசார்கள் ஆர்.டி.ஓ. உத்தமன், நத்தம் தாசில்தார் நாராயணன் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதில் இறந்து போன சர்மிளா பானு பிரேதத்தை மறு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை செய்யவும், சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்கு உத்தரவிடவும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டியும் உரிய நிவாரண அரசு உதவியை உடனடியாக வழங்க வேண்டியும் பாதிக்கப்பட்டவர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து 2 மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டனர்.

சிக்கந்தருக்கு 4 மகள்களும், யாசின்ராஜா என்ற ஒரு மகனும் உள்ளனர். யாசின்ராஜா மலேசியாவில் வேலைபார்த்து வருகிறார். 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. 4 வது மகள்தான் ஷார்மிளா பானு எனபது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.