ரொம்ப நாட்களுக்குப் பிறகு நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை போய் நின்று கேட்டேன். விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிற்கும் என் அருமைத் தோழன் தோழர்.சாமுவேல்ராஜ் சாத்தூரில் சில இடங்களில் பேசியதால் சென்றேன். மக்களை கவனிக்க வைப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் இருந்த மிக நெருக்கமான பேச்சு அது. டிவிகளில் காண்பிக்கும் மாபெரும் தலைவர்களின் பேச்சுக்களையும் விடவும் ஆழமான, நேரடியான கருத்துக்களோடு இருந்தது. என் அருமைத் தோழன் எவ்வளவு அர்த்தத்தோடு வளர்ந்திருக்கிறான் என பெருமையாக இருந்தது.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அறிவொளி இயக்கக் களப்பணியாளராக இருந்த காலத்திலிருந்து தோழர்.சாமுவேல்ராஜைத் தெரியும். கிராமம் கிராமமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் புத்தகங்கள் சுமந்து சென்றவர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அண்ணன் தோழர்.ச.வெங்கடாசலம் அப்போது அறிவொளி இயக்கத்தின் சாத்தூர் பொறுப்பாளராய் இருந்தார். இரவுகளில் அவரது அலுவலத்தில் உட்கார்ந்து இலக்கியம், சமூகம்,வரலாறு, அரசியல் என எவ்வளவோ பேசியிருக்கிறோம். சில சமயங்களில் எங்காவது ஒரு கிராமத்திலிருந்து கடைசி பஸ்ஸைப் பிடித்து சாமுவேல்ராஜ் வந்து எங்கள் உரையாடல்களில் சேர்ந்து கொள்வார். விடிகாலை நான்கரை மணிக்கு அருகில் உள்ள டீக்கடையில் (அதற்கு வெங்கடாசலம் மரணவிலாஸ் என பெயர் வைத்திருந்தார்) டீ குடித்து பிரிவோம். கனவுகளும், இலட்சியங்களுமாய் விரிந்த அற்புத காலம் அது.
அறிவொளி இயக்கத்திற்கு பின்னர் சாமுவேல்ராஜ் வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் கலை இலக்கிய இரவுகள் நடத்திக் கொண்டு இருந்தோம் நாங்கள். எங்கிருந்தாலும் சாமுவேல்ராஜ் தோழர்களோடு வந்து விடுவார். இரவு உரையாடல்கள் தொடர்ந்தன. எபோதாவது சந்தித்துக் கொள்ள முடிந்தாலும், பார்த்த கணத்திலிருந்து அந்தப் பழைய உறவும் நெருக்கமும் அப்படியே பற்றிக்கொள்கிற மனிதராக சாமுவேல்ராஜ் இருந்தார். காதலித்து மணம் புரிந்துகொண்டார். அவரது துணைவியார் தோழர்.சுகந்தியும் அறிவொளி இயக்கம் மூலமாக இயக்கத்திற்கு வந்தவர்தான். (இன்று ஜனநாயக மாதர் சங்கத்தில் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார்.)
தொழிற்சங்க இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அதில் நான், காமராஜ் எல்லாம் செயல்பட்ட போது, தோழர் சாமுவேல்ராஜ் கட்சியின் முழுநேர ஊழியராகி இருந்தார். எங்கள் சங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். பாப்பாக்குடி, உத்தப்புரம் பற்றிய எங்கள் ஆவணப்படங்களுக்கு உதவிகரமாக இருந்தார். சில சமயங்களில் எங்களோடு வந்தும் இருக்கிறார். பின்னர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராகி மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டபடி இருந்தார். தீக்கதிர் பத்திரிகைச் செய்திகளில் அவர் எவ்வளவு முக்கியமான சமூகக் கடமையை ஆற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வேன்.
அவர்தான் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்றவுடன், இயக்கத்தில் தன்னெழுச்சியான உற்சாகமும், ஆர்வமும் உருவானதைப் பார்த்தேன். தங்கள் ரத்த சொந்தம் ஒன்று தேர்தலில் நிற்பதைப்போன்ற உணர்வுடன், தோழர்கள் ஆர்ப்பரிப்போடு பங்காற்றி வருவது தெரிகிறது. தொகுதி முழுக்க தோழர்.சாமுவேல்ராஜ் ம்க்களை சந்திக்க புறப்பட்டார். போன வாரம் ஒருநாள் இரவு பதினொன்றரை மணிக்கு போன் செய்து பேசினேன். “தொந்தரவு இல்லையே..” என்றேன். “இல்ல தோழா... உங்கள் குரலைக் கேட்டால் உற்சாகந்தான் ” என்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கும்போது நான்கைந்து நாட்களில் சாத்தூருக்கு வருவதாகச் சொன்னார். நேற்று வந்தார்.
அஙகங்கு பேசிய சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது...
”இதோ சாத்தூர் முக்கானாந்தலில் நாங்கள் வந்து நிற்கிறோம். இன்று புதிதாக வந்து நிற்கவில்லை. எத்தனையோ முறை இதோ போல் செங்கொடிகள் ஏந்தி இதே இடத்தில் தெருவின் பிரச்சினையிலிருந்து தேசத்தின் பிரச்சினை வரை கையிலெடுத்து போராட்டம் நடத்தியிருக்கிறோம். உங்களுக்காக உழைத்து இருக்கிறோம். ஊருக்காக உழைத்திருக்கிறோம். அந்த உரிமையில் இப்போது உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறோம்”.
”இங்கு மதிமுக சார்பில் வைகோ அவர்கள் போட்டியிடுகிறார். சிறு வயதில் அவரது பேச்சை கேட்பதற்காகவே கூட்டங்களுக்குச் சென்றவன் நான். தந்தை பெரியாரைப் பற்றி அவர் பேசக் கேட்டு சிலிர்த்திருக்கிறேன். இன்று அவர்தான் கொள்கைகள் எதுவுமில்லாமல் மதவெறி சக்திகளோடு போய் இணைந்திருக்கிறார். தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் எனச் சொன்ன ஹெச்.ராஜா என்னும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். நிஜமாகவே வருத்தப்படுகிறேன். வைகோ அவர்களே, நீங்கள் காட்டிய பெரியார் எங்களிடம் பத்திரமாக இருக்கிறார். உங்களிடம் இல்லை.”
”திமுக சார்பில் போட்டியிடும் ரத்தினவேலு அவர்கள் மதுரையில் வர்த்தக சங்கத்தின் தலைவராய் இருந்தவர். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க காங்கிரஸ் அரசு முன்வந்தபோது, அதை ஆதரித்து ரத்தினவேலு நோட்டிஸ் அடித்தவர். இடதுசாரிகள் நாங்களோ, அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் போராடிக்கொண்டு இருந்தோம்.”
”இந்த வெங்கடாச்சலபுரத்தில் முதன்முறையாக அருந்ததியர் மாநாட்டிற்கு உங்களை அழைப்பதற்கு வந்தேன். அந்த மாநாடு மிகப் பெரும் வெற்றி பெற்றது. ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களான உங்கள் பெயரில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்தியது. அருந்ததியர் பெயரை உச்சரித்து, தாங்கி, தங்கள் கட்சியின் பெயரோடு இணைத்து மாநாடு நடத்தும் ஒரு அரசியல் கட்சியை முதன்முறையாக தமிழகம் பார்த்தது. தொடர்ந்து சென்னையில் முப்பதாயிரம் பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில் நாம் பங்கு பெற்றோம். போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக இன்று அருந்ததியர் மக்களுக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. ஆஸ்பத்திரியின் பிணவறைகளிலும், துப்புரவுப் பணிகளிலும் ஈடுபட்ட நம் மக்கள் இன்றைக்கு அதே ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக வலம் வருவதற்கு வழி கிடைத்திருக்கிறது.”
“கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரையில், எம்எல்ஏ, எம்.பி. என எந்தப் பதவியாக இருந்தாலும் அது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்துவோம். எளிமையான முறையில் பிரச்சாரம் செய்கிறோம். ஆனால், மற்ற கட்சியினர் எல்லாம் கோடிக்கோடியாக செலவு செய்கிறார்கள். இதை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள். வெற்றிபெற்றவுடன் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால், கம்யூனிஸ்டுகளுக்கோ மக்கள் சேவை மட்டுமே முழுநேரப்பணி. தோழர் சங்கரய்யா, தோழர் உமாநாத்,தோழர் மோகன் எல்லாம் எம்.பி.யாக வெற்றிபெற்றும் சாதாரண வீட்டில் தான் வசித்தனர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். மதுரை எம்.பி.யாக பதவி வகித்த தோழர் மோகன், பத்தாண்டுகளாக எம்.பி. பதவியில் இருந்தும் கடைசி வரை அதே எளிமையான வீட்டில் தான் வசித்தார். இந்த எளிமையும் நேர்மையும் தான் கம்யூனிஸ்டுகளின் அடையாளம். அந்தப் பாரம்பரியத்தில் வந்த நானும் அப்படித்தான் பணியாற்றுவேன்”
"2004ல் கம்யூனிஸ்டுகள் நாங்கள் பாராளுமன்றத்தில் 64 பேர் எம்பிக்களாக இருந்தோம். அப்போதுதான் நூறு நாள் வேலைத் திட்டம், தகவல் உரிமைச் சட்டம் எல்லாம் எங்கள் யோசனைப்படி நிறைவேற்றப்பட்டன. பெட்ரோலிய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி வைக்க முடிந்தது. 2009ல் எங்கள் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் குறைந்தது. அதன் விளைவுதான் கடுமையான விலைவாசி உயர்வும், ஊழல்களும். பெட்ரோல் விலை கட்டுப்பாடு இல்லாமல் போனது. பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, சாதாரண மக்களுக்கு நல்லது.”
“இடதுசாரிகளிடம் யாரும் கூட்டணி இல்லை என்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் துப்புரவுத் தொழிலாளிகள் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளிகள் சங்கம், வாகன ஓட்டுனர்கள் சங்கம், அரசு ஊழியர் சங்கம், வங்கி மற்றும் இன்சூரன்சு ஊழியர் சங்கம், ஆசிரியர்கள் சங்கம் என வரிசையாக கணக்கெடுத்தால், இடதுசாரிகளை விட மக்கள் நேசிக்கும் கூட்டணி வேறு யாருக்கு அமையப் போகிறது”
“பரமக்குடியில், தலித் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட கொடூரம் நடந்த போது அங்கு உடனடியாக சென்றது மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி. அந்தப் பகுதியில் மக்களோடு மக்களாய் ஒரு மாத காலத்துக்கும் மேல் தங்கி, அவர்களுக்கு பணி செய்தேன் நான். காவல்துறையின் அந்தக் கொடூர செயலை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வழக்கினை நான் உட்பட் 9 பேர் தொடர்ந்தோம். மற்றவர்களின் வழக்கை பல்வேறு காரணங்களால் எடுக்கவில்லை. சாமுவேல்ராஜ் என என் பெயரில்தான் வழக்கு நடந்தது. இறுதியில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது. இன்றைக்கும் அந்த மக்களோடு மக்களாய் நாங்கள் நிற்கிறோம். அந்த உரிமையோடு உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். அருவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள்”
“பல கலர்களில் கொடிகளோடு பல கட்சி வேட்பாளர்கள் எல்லாம் இங்கு வந்திருக்கலாம். நீங்களும் பாத்திருப்பீர்கள். அவர்கள் எல்லாருமே ஒரே கட்சிதான். பேர்தான் வேற வேற. ஆனால் எல்லாருமே முதலாளிகளின் கட்சிதான். இந்த சிவப்புக் கலர் கொடியோடு வந்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் உழைப்பாளர்கள் கட்சி. மக்களுக்கான கட்சி. நீங்கள் கஷ்டப்படும்போது, போராடும்போது யார் உங்களோடு இருந்தார்கள். யார் உங்களை எதிர்த்து நின்றார்கள் என யோசியுங்கள். ஒட்டுப் போடுங்கள்”
ஒவ்வொரு பகுதியிலும், அந்த மக்களிடம் என்ன பேச வேண்டுமோ, அவர்களுக்கு எது புரிய வேண்டுமோ அதைப் பேசுகிறார். கேட்கிற மக்களின் முகங்களில் உண்மைகள் படிகின்றன. நம்பிக்கையோடு கை கூப்பி நகர்கிறார் சாமுவேல்ராஜ்.
சின்னதாய் பெட்டிக்கடை வைத்திருக்கிற நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வேட்பாளரின் வாகனத்தின் பின்னால் சத்தம் எழுப்பிச் செல்கிறார். பார்த்த சாமுவேல்ராஜ் நிறுத்தச் சொல்கிறார். கையை உயர்த்தி ஒரு பத்து ருபாயைக் கொடுக்கிறார். சாமுவேல்ராஜ் குனிந்து வாங்கி, அவரிடம் கை கொடுக்கிறார். வாகனம் செல்கிறது. நான் நின்று அந்த இடத்தின் மக்களை பார்க்கிறேன். அவர்களும் என்னைப் போலவே செங்கொடிகளோடு சென்று கொண்டு இருந்த வாகனத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பாவெல், சிருகண்டன் என நாங்கள் படித்துப் பேசிய கதாபாத்திரங்கள் ஞாபகத்துக்கு வந்து கொண்டு இருந்தார்கள்.
’என் அருமைத் தோழன் சாமுவேல்ராஜ்!’ என விம்மிப் போகிறேன்.
No comments:
Post a Comment