வாரணாசி தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த கெஜ்ரிவால் மீது கற்களும், செங்கற்களும் சரமாரியாக வீசப்பட்டன. இதையொட்டி அவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மோடிக்கு எதிராக…
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜனதாவில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் எம்.எல்.ஏ.வும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மே மாதம் 12–ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதனால் தொகுதியிலேயே தங்கியிருந்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட முடிவு செய்த கெஜ்ரிவால் வாரணாசியில் தினமும் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டு வருகிறார்.
டீக்கடைக்காரருடன் சந்திப்பு
நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கெஜ்ரிவால் வாரணாசி இந்து பனாரஸ் பல்கலைக்கழக பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பிரசாரம் செய்து விட்டு வாரணாசி திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் அப்பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் கேசவ் கசூரியா என்பவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.
(கேசவ் கசூரியா வாரணாசியில் நரேந்திமோடிக்கு ஆதரவாக அவரது வேட்பு மனுவை முன்மொழிபவர்களின் பட்டியலில் இருப்பவர் ஆவார்.) இது பற்றிக்கேள்விப்பட்டதும் 500–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த டீக்கடையில் இருந்த கெஜ்ரிவாலை திடீரென முற்றுகையிட்டனர்.
சரமாரி கல்வீச்சு
அவர்கள் அனைவரும் நரேந்திரமோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவாறே, கெஜ்ரிவாலை நோக்கி சரமாரியாக கற்களை வீசினார். மேலும் சில இளைஞர்கள் செங்கற்களையும் வீசினார்கள். கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அவரை பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டதால் இந்த தாக்குதலில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
போலீஸ் தடியடி
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார் கெஜ்ரிவாலை முற்றுகையிட்ட இளைஞர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பின்னர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கெஜ்ரிவாலை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில இளைஞர்களையும் பிடித்து வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீண்டும் முற்றுகை
இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் நேற்று காலை கெஜ்ரிவால் கம்பெனி பாக் என்னும் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை ஏராளமான இளைஞர்கள் திடீரென சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவாக ஹர ஹர மோடி… என கோஷமிட்டனர். மேலும் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லியை விட்டு ஓடிவந்த பயந்தாங்கொள்ளி என்று வர்ணித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் அந்த இளைஞர்களை விரட்டியடித்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘எங்கள் கட்சியின் தலைவரை ஓட்டு சேகரிக்க விடாமல் தொடர்ந்து பா.ஜனதாவினர் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், கெஜ்ரிவாலை முற்றுகையிட்டது, பா.ஜ.க.வினர் அல்ல என்றும் அவர்கள் கெஜ்ரிவாலை எதிர்க்கும் உள்ளூர்க்காரர்களாக இருக்கலாம் என்றும் பா.ஜனதா மறுத்துள்ளது.
24 மணிநேரமும் பாதுகாப்பு
வாரணாசியில் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு எதிராக இளைஞர்கள் கோஷமிடும்–முற்றுகையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கெஜ்ரிவாலுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க வாரணாசி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment