சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்திற்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த,அந்த தொகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏ, எம்பிக்கள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அரசியல் கட்சி பிரமுகர்கள், பேச்சாளர்கள் தங்களுடைய இல்லங்களில் மட்டுமே இருக்க வேண்டும்.ஒரு இடத்தில் 4 பேருக்கு மேல் கூடி இருக்கவும், கூட்டம் நடத்தவும், வாக்கு சேகரிக்கவும் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வேட்பாளார்கள் அனுமதி இன்றி மற்ற பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ஆந்திராவிற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் அதிகமாக பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
இதுவரை தமிழகத்தில் ரூபாய் 51 கோடி மதிப்புள்ள பொருட்கள்,பணம் பறி-முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்டதில் ரூபாய் 23.53 கோடி ரொக்கமும், நகை உள்ளிட்ட பொருட்கள் மதிப்பு ரூபாய் 27.44 கோடி எனவும் தகவல் தெரிவித்தார். மேலும் வாக்களிக்க குடும்ப அட்டையை ஆவணமாக பயன்படுத்த முடியாது என்றும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment