“ இந்த வருஷம் ஸ்கூல் பங்க்ஷன்ல நீதான் முதல்ல வரணும்,
எல்லா போட்டியிலும் பரிசு வாங்கணும்” னு
சொல்லி குழந்தைகளின் மனதில்
பாசமோடு பழக வேண்டிய மற்ற குழந்தைகளை
போட்டியாக (எதிரியாக)
நினைக்கும் மனப்பான்மையை
வீட்டில் உள்ளோர் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்கின்ற காலமிது.
நல்ல மார்க் வாங்கணும் ,
பெரிய வேலைக்கு போகணும் ,
கைநிறைய சம்பாதிக்கணும்னு சொல்லி சொல்லியே படிப்பைத் தவிர,
மார்க்கைத் தவிர, சம்பாதனையைத் தவிர வேறெதையும் அறியாததாகவே
ஒரு குழந்தை வளர்க்கப்படுகிறது .
தாத்தா, பாட்டி, அம்மா , அப்பா , அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை போன்ற
ஒரு குடும்ப பாசமற்ற ஒரு ஜீவனாக,
சம்பாதனை ஒன்றையே குறிவைத்து துரத்தப்பட்ட குதிரையாய்
ஓடத் துவங்கிய வாழ்வில்,
பந்த பாசத்திற்கு இடமின்றி போய் ,
பின்னாளில் காதலி , மனைவி , குழந்தைகள் என எல்லோரையுமே
ரத்தம் சதை எலும்பு கொண்ட உருவமாகவே பார்க்கும் நிலை உருவாகிப்போனது .
கேள்வியின் தன்மையையே அறியாமல் கேள்விக்குரிய பதிலை மட்டுமே படித்துப் பழகியதால்
பதிலின் காரணமும் அறியாமலே போனது. இதுதான் இன்றைய IT – M.B.B.S.,
போன்ற எல்லாவித படிப்பும் கற்றுத் தரும் அறிவு.
தான் , தன்னுடைய படிப்பு , பதவி , சம்பாத்தியம் என குறுகிவிட்ட மனதில்
பாசமும் , நேசமும், அன்பும் , காதலும் பேசுதலுக்குரிய பட்டிமன்ற கருவாகி போனது விந்தையல்லவே.
பெற்று வளர்த்த அப்பா, அம்மாவுக்கு நீ காட்டும் அன்பு , பரிவு இதுதானாப்பா என்று
மகனை கேட்கும் பெற்றோரை பார்த்து மகன் கேட்கிறான் ,
“அப்பிடின்னா என்ன ?
நோட்சில் இல்லையே அப்பா ?”
உண்மைதானே .
நாம் சொல்லித்தரவே இல்லையே ?
நமது கவனம் முழுவதும் மார்க் , முதலிடத்தில் வெற்றி, கைநிறைய சம்பளம் இதுதானே .
தெரியாத ஒன்றை அவர்களிடம் எதிர்பார்ப்பது நமது தவறுதானே .
வெறும் பணம் பண்ணும் கருவியாக நாம் உருவாக்கிய பிள்ளைகளிடம்
பாசம், நேசம், மரியாதை, பாதுகாப்பு என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியாது.
வெளிநாட்டில் வாழும் மகனிடம் (மகளிடம்) கதறி அழுது
“உடல்நிலை கேட்டுப் போச்சுப்பா கொஞ்சம் வந்து போய்யா” என்று கெஞ்சினாலும் ,
அங்கிருந்து வரும் பதில் “ பணம் அனுப்பி இருக்கிறேன் ,
விசா கிடைக்கல , நல்ல டாக்டரா பாருங்க விசா கெடைச்சதும் வரேன் “ அவ்வளவுதான் .
அவர்கள் மனதில் உங்களுக்கு தேவை பணம்தான் என்றாகிப் போனது,
இது உங்கள் தயாரிப்பின் பலன்தான் என்பதை தவிர வேறென்ன சொல்லமுடியும்.
உங்கள் தயாரிப்பில் உருவான ஒரு ATM மனித கருவி அவர்கள் அவ்வளவுதான்,
கடிதம் போட்டால் பணம் வரும் ,
பாசம் வராது ,
ஏனென்றால் அப்படித்தான் நம்மால் ப்ரோக்ராம் (அவர்கள் உருவாக்கம்) செய்யப்பட்டது.
இனி வருங்காலங்களில் முதியோர் இல்லங்கள் நிறைய உருவாகும் வாய்ப்புகள்
பிரகாசமாக தெரிகின்றதை மறுப்பதற்கில்லை.
மனதளவிலும், உடலளவிலும் இன்றே அந்த வாழ்விற்கு தயாராகிவிட்டால்
நாளை விரட்டப்படுமுன் நாமே சென்று விடலாம்.
இதுவும் நாம் பெரிதும் எதிர்பார்த்த மேலைநாட்டு கலாச்சாரம்தான் ,
எப்போது அம்மாவை “மம்மி” (பிணமே) என்றழைக்க விரும்பினோமோ –
அன்றே நாம் மற்ற விஷயத்திற்கும் தயாராக வேண்டியதுதான்.
அன்பையும் ,
பாசத்தையும் ,
பரிவையும் ,
மனிதாபிமானத்தையும்,
மனித நேயத்தையும்,
கருணையையும்
கற்றுத் தந்து
சக மனித உயிர்களையும் தனது உறவாக பார்க்கும் உணர்வை
குழந்தைகளுக்கு பாலுடன், சோறுடன் ஊட்டினால்
நாளை அவர்கள் ஒரு ATM மிஷினாவதை மாற்றலாம்.
இல்லையென்றால் முக்கிய வீதிகளில் அமைக்கப்படும் ATM சென்டர் போல
எல்லா வீடுகளிலும் மனித உருவில் ATM மிஷின்கள் இருக்கும்,
அதில் பணமும் இருக்கும்,
ஆனால் மருந்துக்கு கூட அன்போ , பாசமோ , கருணையோ , பரிவோ இருக்காது.
மிஷினுக்கேது பாசம் ?
இன்றைய குழந்தைகள் நாளைய ATM மிஷின்களா இல்லை,
அன்பு, பாசம், பரிவு, கருணை எல்லாம் கொண்ட மனித இன வழித்தோன்றல்களா ?
பதில் : உங்கள் குழந்தையை நீங்கள் வளர்ப்பதில் உள்ளது .
சங்கினை ஊதுவோம் எழுபவர் எழட்டுமே , என்ன சரிதானே ?
நாம் வேறென்ன செய்யமுடியும் ?
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
No comments:
Post a Comment