தமிழகத்தில்தான் தினம்தினம் புதுவிதமான மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த புதுப்புது மோசடிகளை புலனாய்வு செய்வதன் மூலம் நமது காவல் துறையினருக்கு நல்ல அனுபவம் கிடைக்கிறது.
வெளிநாட்டு காவல் துறையினர் கூட இங்கு வந்து அவர்களின் அனுபவங்களை கேட்டு சென்றால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லலாம். வருமான வரித் துறையினர் போல் திடீர் ரெய்டு நடத்தி கொள்ளையடித்து செல்வது, சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிப்பது, லஞ்ச ஒழிப்பு துறையினர் போல் நடித்து பணம் பறிப்பது என பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன.
தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வந்து விட்டதால், தேர்தல் மோசடிகள் நடைபெற துவங்கியுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக யாரும் கொண்டு செல்ல முடியாது. அப்படி கொண்டு சென்றால் அதற்கு உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த செய்தி தினமும் பத்திரிகைகளில் வெளியானாலும் பலர் விவரம் தெரியாமல் பணத்தை எடுத்து சென்று மாட்டிக் கொள்கிறார்கள்.
உண்மையிலேயே பறக்கும் படையினரிடம் சிக்கி விட்டால் பரவாயில்லை. ஆவணம் காட்டி பணத்தை திருப்பி பெற்று கொள்ளலாம். ஆனால், பறக்கும் படை போல் நடித்து மோசடி செய்யும் ஆசாமிகள் பலர் உலவுகின்றனர். அவர்களிடம் சிக்கி விட்டால், அவ்வளவுதான்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த பன்றி இறைச்சி வியாபாரி சிவக்குமார் என்பவர், பன்றி இறைச்சி வாங்குவதற்காக மோட்டார் பைக்கில் சென்றிருக்கிறார். அவரை ஒருவர் வழிமறித்து, தான் பறக்கும் படை போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு, சோதனை செய்திருக்கிறார். அப்போது சிவக்குமாரிடம் இருந்து ரூ.34,700 பறித்த அந்த மர்மநபர், பணத்துக்கு உரிய ஆவணம் எடுத்து கொண்டு அருகில் உள்ள ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் வந்து காட்டினால், பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறார். இதை நம்பி சிவக்குமாரும் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற போதுதான், மர்மநபர் போலி ஆசாமி என்பது தெரிந்தது. போலீசார் விசாரணையில் அந்த மர்மநபர் ஏற்கனவே போலீசாக வேலை பார்த்து சஸ்பெண்ட் ஆனவர் என தெரிய வந்திருக்கிறது. அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தேர்தல் சமயத்தில் இதே போல் பல போலி ஆசாமிகள் புதுபுது ஐடியாக்களுடன் மோசடிகளில் ஈடுபடுவார்கள் என்பதால் வியாபாரிகள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment