திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீனி வாசன் (33). கூலி தொழிலாளி. வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி (29). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. காயத்ரி மீண்டும் கர்ப்பம் ஆனார். மருத்துவ பரிசோதனைக்காக, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனைக்கு சென்றார். ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது தெரிந்தது.
நேற்று காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் 4 குழந்தைகளையும் டாக்டர்கள் வெளியே எடுத்தனர். இதில் மூன்று குழந்தை பெண், ஒன்று ஆண் குழந்தை. எடை குறைவாக இருப்பதால் அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். தாய் பலவீனமானதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, “அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது இதுதான் முதல்முறை. டாக்டர் குழுவினர் அவர்களை முழு நேரமும் கண்காணித்து வருகிறோம்’ என்றனர்.
தகவலறிந்ததும் மருத்துவமனையில் குவிந்த நிருபர்கள், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் தில்ஷாத்திடம் இதுபற்றி கேட்டபோது, ‘சுகாதாரத்துறை அமைச்சர் யாருக்கும் எந்த தகவலும் கொடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டதால் தர மாட்டோம்’ என்று கூறினார். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் இருந்த குழந்தையின் தந்தை அல்லது அவர்களது உறவினர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள முயன்றபோது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் காவலர்கள் சரவணன் மற்றும் தென்றல் ஆகியோரை வைத்து நிருபர்களை மிரட்டி வெளியே அனுப்ப இயக்குனர் தில்ஷாத் உத்தரவிட்டார்.
இதனால் உறவினர்களும் பேச மறுத்து விட்டனர். மருத்துவமனை டீன் டாக்டர் கனகசபை உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பத்திரிகைக்கு இதுகுறித்து எந்த தகவலும் சொல்லக்கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டதால், யாரும் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
No comments:
Post a Comment