தமிழக மலை கிராமங்களில், 80 சதவீத திருமணம், குழந்தை திருமணங்களாக நடக்கும் அதிர்ச்சி தகவல், மலை கிராம குழந்தை தொழிலாளர் பள்ளி மாணவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. “வாழ்விடத்திலேயே, பிளஸ் 2 வரை படிக்க வழி இல்லாதது, போதிய மருத்துவ வசதிகளை அரசு செய்து தராதது போன்றவை, இதற்கு முக்கிய காரணம்’ என, ஆய்வின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.
இளம் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட, தேசிய அறிவியல் இயக்கம், மத்திய அரசின் உதவியோடு, 20 ஆண்டாக, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இதில், மாணவர்களின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, “இளம் விஞ்ஞானி’ விருது தரப்படும். இதன்படி, 21ம் ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மத்திய பிரதேசம், போபாலில், டிசம்பர் மாதம் நடந்தது. மாநில அளவில், மாணவர்களின் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், மாணவர்கள் சமர்பித்த, 210 கட்டுரைகளில், 30 கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வாகியுள்ளன. தேசிய அளவில் இதுவரை இல்லாத வகையில், மலை கிராமத்தைச் சேர்ந்த, குழந்தை தொழிலாளர் பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த, “குழந்தை திருமணங்களால் ஏற்படும் மனித ஆற்றல் இழப்பு’ என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது.
சிறப்பு பள்ளிகள்:
குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்காக, சிறப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதி, ஜீயன் தொட்டியிலும், இது போன்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும், ஆறாம் வகுப்பு மாணவன் கவின் தலைமையில், விஜய், மீனா, நந்தினி ஆகியோர் அடங்கிய, மாணவர் குழு, ஆசிரியர் கனகராஜின் வழிகாட்டுதல்படி, இரண்டு மாதங்களாக, சுற்று வட்டார கிராம மக்களைச் சந்தித்து, ஆய்வு கட்டுரை தயாரித்துள்ளது.
ஆய்வில் அதிர்ச்சி:
கட்டுரையில் உள்ள சில தகவல்கள்: அணு ஆற்றல், காந்த ஆற்றல், மின் ஆற்றல், இயந்திர ஆற்றல், சூரிய ஆற்றல், நீராற்றல், வெப்ப ஆற்றல் என, ஆற்றிலின் வகைகள் விரிகின்றன. இதற்கெல்லாம் அடிப்படையானது, மனித ஆற்றலே. செவ்வாய் கிரகத்திற்கு, “மங்கள்யான்’ செயற்கைக்கோளை அனுப்பும் நவீனமும், விஞ்ஞானமும் வேகமாக வளர்ந்து வரும் இந்த அறிவியல் யுகத்தில், “குழந்தை திருமணங்கள்’ எனும், ஒரு சமூகப் பிரச்னையால், மனித ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. உலக அளவில், இந்தியாவில் தான், அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் (45 சதவீதம்) நடப்பதாக, “யுனிசெப்’ தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக மலை கிராமங்களில், 80 சதவீத திருமணங்கள், குழந்தை திருமணங்களாக நடந்து வருகின்றன. பர்கூர் மலை கிராமமான ஜீயன் தொட்டி, கொங்கடை கிராமத்தில், 93 குடும்பங்களில், 432 பேர் உள்ளனர். இதில், திருமணமானவர்கள், 257 பேர். இதில், 18 வயது அடையும் முன் திருமணம் செய்தவர்கள், 206 பேர். இதன்படி, 80 சதவீத திருமணங்கள், குழந்தை திருமணங்களாக நடந்துள்ளன. 18 வயதுக்கு மேல் திருமணம் செய்த, 51 பேரில், ஆறு பேர் மட்டுமே பெண்கள். முதல் பிரசவத்திலேயே, 27 குழந்தைகள் இறந்துள்ளன. இதன் மூலம், மனித ஆற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவல்கள், கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
தீர்வு என்ன?
இந்த மாணவர் குழு, பல்வேறு தீர்வுகளையும் முன் வைத்துள்ளது.
* குழந்தைகளுக்கு, மருத்துவ ரீதியாக ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் நாடகம், வீடியோ காட்சிகள், தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
*அரசின் திருமண உதவித்திட்டத்தில் பயன்பெற, 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும். அதற்காக, மலை கிராம பகுதியிலேயே, மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
*மலை கிராம ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர், கிராம செவிலியர், வி.ஏ.ஓ., சமூக நல அலுவலர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினரை ஒருங்கிணைந்து குழு அமைத்து, குழந்தை திருமண பாதிப்புகள்; 2006ல் போடப்பட்ட குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
*கிராம அளவில் குழந்தை திருமண தடுப்பு கமிட்டிகள்; வட்டார, வட்ட, மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைத்தல்; இலவச சட்ட ஆலோசனை தர வேண்டும்,
*திருமண பத்திரிகைகள் அச்சிடும்போது, மணமகன், மணமகள் பெயரோடு, வயதையும் அச்சிடுவதை கட்டாயமாக்க வேண்டும். மலைவாழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களையும், அரசு வகுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. இப்படி, சமூக உணர்வோடு சிறார்கள் முன் வைத்துள்ள இந்த தீர்வுகளை, மாநில அரசு பரிசீலித்தால், குழந்தை திருமணங்கள் நிச்சயம் கட்டுக்குள் வரும்; மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரமும், மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.
எந்த வகையில் இழப்பு?
சத்து குறைபாடு, ரத்த சோகை, கல்வி இழப்பு; சிந்தனை வளர்ச்சியில் தடை; பேறு கால இழப்பு குறை பிரசவம்; பக்குவமின்மையால் ஏற்படும் மனமுறிவு. உடல் பக்குவமடையாததால் ஏற்படும் கருக்கலைவு; சராசரி வாழ்நாள் குறைதல்; பெற்றோர் இழப்பால் குழந்தைகள் அனாதையாக்கப்படுதல்; பாலின விகித வேறுபாடு போன்றவற்றால், மனித ஆற்றல் வீணடிக்கப்படுகிறது.
பாதிப்பு எவ்வளவு?
மேல்நிலைக் கல்வி, அங்கன்வாடி மையம், மருத்துவமனை ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு, 50 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. 10, 12 வயதில், உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி பெறாததால், சில சமயம் கருவுற்று, குழந்தை பெறும் முன்பே இறந்து விடுகின்றனர். அதை மீறி குழந்தை பிறந்தாலும், பிறந்த சில மாதங்களில் குழந்தைகள் இறக்கின்றன அல்லது எடை குறைவாக பிறக்கின்றன. பிறக்கும்போதே ரத்த சோகையுடன் பிறக்கின்றன. இந்த சூழலில் குழந்தை நோஞ்சானாக வளர்கிறது. சராசரி வாழ்நாள் வாழ்வதில்லை. இந்தியாவில் மனிதனின் சராசரி வாழ்நாள், 67 ஆண்டுகள். 18 வயது வரை குழந்தைப் பருவம் என்றாலும், சராசரி உழைப்பு காலம், 49 ஆண்டுகள். அதாவது, 17,885 நாட்கள். தினமும், குறைந்தபட்ச கூலி, 150 ரூபாய் என வைத்தால், 26 லட்ச ரூாபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆக, குழந்தை திருமணங்களால், உழைப்பு இழப்பு மட்டுமின்றி பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
“”பள்ளிக்கூடத்தை தாங்கய்யா…!”
“”எங்களின் குழந்தைகளுக்கு, 18 வயசுக்கு முன்னாடி, கல்யாணம் பண்ண வேண்டாம்கிறீங்க… அதுக்கு, எங்க ஊர்ல, 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடம் தேவை. எங்க ஊருக்கு அருகே, 8ம் வகுப்பு வரை, பள்ளிக்கூடம் இருக்கு… அதுக்கு மேல படிக்கணும்னா, 60 கி.மீ., தூரத்தில உள்ள, அந்தியூருக்கு போகணும். அதனால், நாங்க எங்க குழந்தைகளை, எட்டாம் வகுப்புக்கு மேலே, படிக்க அனுப்புறதில்லை… திரும்பவும் குழந்தைக ஆடு, மாடு மேய்க்க போயிடுவாங்க… “”போதிய பாதுகாப்பு இல்லாம, நாங்களும் உடனடியாக கல்யாணத்தை செஞ்சு வச்சிடுறோம். “”எங்க குழந்தைகள், 12வது வரை படிச்சதுனா, 17 வயசாயிடும். ஒரு வருசத்துல கல்யாணம் பண்ணிடுவோம். நீங்க சொல்றபடி அரசாங்க சட்டத்தை மதிச்சபடியும் இருக்கும், அத்தோட, முதல்வரோட திருமண உதவித் திட்டம் மூலமா, தாலிக்கு தங்கமும், கல்யாண செலவுக்கு, 25 ஆயிரம் ரூபாயும் கிடைச்சுரும்… நாங்களும் கடனாளியா வேண்டியதில்லை. விழிப்புணர்வு நோட்டீசுக்கு பதில், பள்ளிக்கூடத்தை திறங்கய்யா…
மாதன், ஜீயன் தொட்டி, பர்கூர்.
“”என்னோட அப்பா சக்திவேல், 12 வயதுள்ள பெண்ணை திருமணம் செஞ்சிருக்கார்… 13 வயதில் நான் பிறந்ததும், என் அம்மா செத்துப் போயிட்டாங்க… “தாயைக் கொன்று பிறந்த பிள்ளை வேண்டாம்’னு, என்னை அனாதையாக்கிவிட்டு, என் அப்பா, வேறு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு, வேற ஊருக்கு போயிருட்டாரு… அனாதையான என்னை, என் அத்தை வளர்க்கிறாங்க… குழந்தை திருமணத்தால, நான் நேரடியா பாதிக்கப்பட்டதால தான், அதுபத்தி ஆய்வு செஞ்சேன்…
ஆய்வு மாணவர் குழுத் தலைவர் கவின்.
“”குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியில் படிப்போர், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; வாய்ப்பு கிடைத்தால், எங்களாலும் சாதிக்க முடியும் என, மாணவர் கவின் குழு நிரூபித்துள்ளது. இந்த கட்டுரை, தேசிய அளவிலும் சிறந்த இடம் பிடிக்கும்.
சண்முகம், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர், ஈரோடு மாவட்டம்.
No comments:
Post a Comment