டெல்லி: முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட கையோடு, காங்கிரஸ் கட்சியை வேரோடு சாய்த்து விட்டது ஆம் ஆத்மி. அக்கட்சிக்கு டெல்லியில் கிடைத்துள்ள வெற்றி மிக முக்கியமானது, வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது.
முதல் தேர்தலிலேயே 15 வருட கால காங்கிரஸ் ஆட்சிக்கு திரை போட்டு விட்டது ஆம் ஆத்மி. அதை விட முக்கியமாக கிட்டத்தட்ட பாஜகவையே நடுநடுங்க வைக்கும் அளவுக்கும் இடத்தைப் பிடித்து பாஜகவுக்கும் சற்று கலக்கத்தைக் கொடுத்துள்ளது கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 25 இடங்களில் இக்கட்சி முன்னிலையில் உள்ளது. 30 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைத் தழுவுகிறது.
லீடிங் செய்திகள் வரத் தொடங்கியதுமே கேஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு கொண்டாட்டங்களில் குதித்தனர். அவர்களிடையே கேஜ்ரிவாலும் காணப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது இப்போதைய கவலை அடுத்த முதல்வர் யார் என்பது அல்ல. அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. நாட்டுக்கு எப்படி உதவப் போகிறோம் என்பது மட்டுமே எங்களது ஒரே கவலை என்றார்.
பின்னர் தியானம் செய்வதற்காக அலுவலகத்துக்குள் போய் விட்டார் கேஜ்ரிவால்.
பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருந்தாலும் கூட கேஜ்ரிவாலின் எழுச்சிகரமான வெற்றி, அக்கட்சிக்கும் பெரும் நெருக்கடியாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி : ஒன் இந்தியா
No comments:
Post a Comment