Latest News

4 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து பிறகு சொல்கிறேன் - ஜெ.

சென்னை: ஏற்காடு இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவிற்கு மகத்தான வெற்றி தேடித்தந்த வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது முதலே அதிமுக வேட்பாளர் சரோஜாதான் முன்னணியில் இருந்தார்.

அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியான உடன் அ.தி.மு.க. தொண்டர்கள் போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்களின் ஆர்வத்தை அறிந்து முதல்வர் ஜெயலலிதா அவர்களை 12.30 மணியளவில் வீட்டுக்குள் வரவழைத்தார்.

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் வளர்மதி, மாதவரம் மூர்த்தி, ரமணா, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஜெயகுமார், மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், வெங்கடேஷ் பாபு, விருகை.ரவி உள்பட ஏராளமா னோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா கூறியதாவது:

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதியாகி விட்டது. ஒட்டு மொத்தமாக எத்தனை வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது ஓட்டுகள் முழுமையாக எண்ணப்பட்ட பின்பு தெரியவரும்.

ஓட்டு எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
ஏற்காடு தொகுதி தேர்தலில் கழக வெற்றிக்காக பாடுபட்டு அயராது உழைத்த தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் எனது உயிரினும் மேலான கழக உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. வெற்றிக்காக பாடுபட்ட தோழமை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஏற்காடு பிரசாரத்துக்கு சென்ற போது என்னை இன்முகத்துடன் வரவேற்று அன்பு பொழிந்து மகத்தான வெற்றியை அள்ளித் தந்துள்ள ஏற்காடு தொகுதி வாக்காளர்ளுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த இரண்டரை ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் மக்களுக்காக எனது தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நல திட்டங்கள் அவற்றின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

ஏற்காடு மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று அ.தி.மு.க. அரசுக்கு அங்கீகாரம் தெரிவித்துள்ளனர். மீண்டும் ஒரு முறை ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட பிறகு மீண்டும் விரிவான கருத்தை தெரிவிக்கிறேன் என்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள், 4 மாநில தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஜெயலலிதா , இப்போது ஏற்காடு தொகுதி தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். முழுமையாக தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மீண்டும் உங்களை சந்தித்து எனது கருத்துக்களை தெரிவிப்பேன் என்றார்.
நன்றி : ஒன் இந்தியா

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.