டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் 11 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக அனைத்து தொகுதிகளிலுமே டெபாசிட்டை பறிகொடுத்தது. அத்துடன் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நோட்டா பட்டனுக்காக வாக்குகளைவிட மிகவும் குறைவான வாக்குகளையே தேமுதிக வேட்பாளர்கள் பெற்றிருந்தனர்.
பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது டெல்லி சட்டசபை தேர்தல். ஆளும் காங்கிரஸை தோல்விக்கு தள்ளிவிட்டு பாரதிய ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் விஸ்வரூபமெடுத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, டெல்லி சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கையில் அபார விஸ்வரூபம் எடுத்துவிட்டது பாஜக, காங்கிரஸ் கட்சிகளை கதிகலங்க வைத்துவிட்டது,.
அதுவும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும் கூட கெஜ்ரிவாலிடம் தோல்வியைத் தழுவுகிறார் என்பது காங்கிரஸுக்கு பலத்த அதிர்சிதான். இப்படி டெல்லியில் புதிய அரசியல் சூறாவாளி உருவெடுத்திருக்கும் நிலையில் 11 இடங்களில் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக நிலையை சொல்ல வேண்டியது இல்லை.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரங்களில் தேமுதிகவின் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் பற்றி விரிவாக அலசப்பட்டது. ஆனால் தேமுதிக என்ன நிலைமையில் இருக்கிறது என்பதைத்தான் அறிய முடியாமலேயே இருந்தது.
அதன் பின்னர் டெல்லியில் தேமுதிக போட்டியிட்டிருக்கும் 11 தொகுதிகளிலும் டெபாசிட்டை கூட தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் டெல்லி சட்டசபை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் கூட தேமுதிகவின் வேட்பாளர்களுக்கு கிடைக்கவில்லை என்று செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் 12 மணி நிலவரப்படி தேமுதிக வேட்பளார்கள் வாங்கிய வாக்குகள் விவரம் முதலில் வெளியானது அக்கட்சியினரை அலற வைத்தது. அவ்வளவு மோசமாக வாக்குகளை வாங்கியிருந்தனர்.
மாலை 5 மணியளவில் தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிலவரம்:
வசீர்புர் தொகுதி தேமுதிக வேட்பளர் ஈஸ்வரிக்கு 362 வாக்குகள்
ஜனக்புரி தொகுதி தேமுதிக வேட்பாளர் சொர்ணாவுக்கு 110 வாக்குகள்
புதுடெல்லி தொகுதி தேமுதிக வேட்பாளர் மணிக்கு 205 வாக்குகள்
கல்காஜி தொகுதி தேமுதிக வேட்பாளர் ராமுவுக்கு 172 வாக்குகள்
ஆர்.கே.புரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரகாஷ்க்கு 165 வாக்குகள்
திரிநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சுப்பிரமணியன் 298 வாக்குகள்
பாலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் ரத்தினத்துக்கு 230 வாக்குகள்
ராஜேந்திர நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் தானப்பனுக்கு 152 வாக்குகள்
மாள்வியா நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சர்மிளாவுக்கு 184 வாக்குகள்
சகூர்பஸ்தி தொகுதி தேமுதிக வேட்பாளர் செங்கோட்டையனுக்கு 151 வாக்குகள்
ஜங்புரா தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவாவுக்கு 256 வாக்குகள் கிடைத்தன
தேமுதிக போட்டியிட்ட தொகுதிகளில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டனுக்கு கிடைத்த வாக்குகளைவிட மிகவும் குறைவான வாக்குகளே அக்கட்சியின் வேட்பாளர்களுக்குக் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : ஒன் இந்தியா
No comments:
Post a Comment