சேலம்: ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடத்தாமல், நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இடைத் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு, மீண்டும் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் இந்தியா பெருமையோடும், கண்ணியத்தோடும் தலைநிமிர்ந்து ஜனநாயக ஒளியைத் தரும் நாடாகத் திகழ்கிறது. அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளையும் நசுக்க முற்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் உள்ளிட்ட சவால்களையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தை இந்தியா பாதுகாத்த புகழுக்குரிய சாதனைக்கான காரணங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்திய பாங்கு முக்கியமான காரணமாகும்.
கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தேர்தல்களில் குறிப்பாக இடைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஊழலில் திரட்டப்பட்ட பணத்தைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகளை, விதிகளை அப்பட்டமாக மீறுகின்ற அநீதியாகும்.
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், அப்போது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் வாக்காளர்களுக்கு பெருமளவு பணத்தைக் கொடுத்து அருவருக்கத்தக்கச் செயலில் ஈடுபட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில், தற்போதைய ஆளும் கட்சியான அண்ணா தி.மு.க. அதே மோசமான காட்சியை அரங்கேற்றியது. ஆளும் கட்சியினர், வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் வீதம் விநியோகித்தபோது, கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டும் கூட, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கும் மேலாக பல இடங்களில் காவல்துறையினரின் முழு ஒத்துழைப்போடு வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி பணத்தை வாரி இரைத்தது.
தமிழ்நாட்டில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு, மறுக்க முடியாத சாட்சியங்களோடு இதுகுறித்து விளக்கமான புகார் கொடுத்தேன். ஆனால், தொடக்கத்தில் இருந்தே ஆளும் அண்ணா தி.மு.க.வுக்கு மறைமுகமாக ஆதரித்து செயல்பட்டுவந்த அந்தத் தேர்தல் ஆணைய அதிகாரி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படவே இல்லை என்று ஒரே அடியாக மறுத்து அப்பட்டமான பொய்யைச் சொன்னார்.
டிசம்பர் 04 ஆம் தேதி நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தொகுதி முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு 2,500 ரூபாய் ஆளும் அண்ணா தி.மு.க. கொடுத்தது. தி.மு.கழகம் தன் பங்குக்கு வாக்காளர்களுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கொடுத்தது. இந்த உண்மையை தொகுதில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக அறிவார்கள். இதனால்தான் 90 சதவீத வாக்கு பாதிவானது. அதுவே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான சரியான சாட்சியமாகும்.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை 08 ஆம் தேதி அன்று நடத்தாமல், நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இடைத் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு, தேர்தல் ஆணையம் தானே தீர்மானிக்கும் கால இடைவெளிக்குப் பிறகு இடைத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழக மக்கள் மனதில் தேர்தல் ஆணையம் குறித்த நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் நிலை நாட்ட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment