டெல்லி: திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை தனியாகத் தவிக்க விட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது.
அதிரடி தீர்ப்பு
இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பில், திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவமும் அல்ல. இதுபோல் சேர்ந்து வாழ்வோருக்கு வெளிநாடுகளில் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்படுகிறது. திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
புதிய நெறிமுறைகள்
இந்நிலையில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நீதிபதி பினாகி சந்திர கோஷ் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய நெறிமுறைகளை அளித்துள்ளது.
நிதி திரட்டுவது, வீட்டுக்குரிய ஏற்பாடுகள், பொறுப்பு ஒப்படைத்தல், பாலியல் உறவு, குழந்தை வளர்ப்பு, வெளிப்படையாகப் பழகுதல் போன்றவற்றை ஆணுடன் சேர்ந்து வாழ்ந்ததற்கான அம்சங்களாகக் கருதலாம். கூட்டு வங்கிக் கணக்கு, இருவரது பெயரிலும் அசையா சொத்துக்களை வாங்குவது அல்லது பெண்ணின் பெயரில் வாங்குவது, வர்த்தகத்தில் நீண்ட நாள் முதலீடு, இருவரின் பெயரிலோ அல்லது ஒருவரது பெயரிலோ பங்குகளை வாங்குவது, வீட்டு பராமரிப்பு, சமையல் செய்வது, பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது, நீண்டநாள் நட்பு போன்றவற்றையும் ஆண்-பெண் இருவர் சேர்ந்து வாழ்ந்ததற்கான அம்சங்களாகக் கூற முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment