Latest News

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவது தவறானது: இஸ்ரோ முன்னாள் தலைவர் பரபரப்பு பேட்டி


பெங்களூர்: விண்வெளி குறித்தான செயல்பாடுகளில் இந்தியா நத்தை வேகத்தில் செயல்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகள் குறித்தான தெளிவான திட்டமில்லை. இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் தவறானது என பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய மங்கள்யான்' விண்கலத்தை ஏவியது இந்தியா. இதன் மூலம் ஆசிய நாடுகளிலேயே முதலாவதாக செவ்வாய் குறித்து ஆராய விண்கலம் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தியாவின் இந்தச் சாதனையை சீனா உள்ளிட்ட உலக நாடுகள் ஒருபுறம் பாராட்டிக் கொண்டிருக்க, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியது தவறான செயல்' என விமர்சித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது...


சீனாவுடன் போட்டி...

விண்வெளி திட்டங்களில் சீனாவுடன் இந்தியா போட்டி போட முடியும் என்றும், சீனாவை பிடிக்க முடியும் என்றும் சிலர் சொன்னால், அந்த போட்டியில் நாம் மிக மோசமாக தோற்றுவிட்டோம். விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வரை ஆளுடன் அனுப்பும் செயற்கைகோளை தவிர சீனா மற்றும் இந்தியா ஆகிய 2 நாடுகளும் சமமாக இருந்தன.

ரிமோட் சென்சிங்....

 வேகமாக முன்னேறுவதில் நம்மிடம் அனைத்தும் இருந்தன. உண்மையில் சில தொழில்நுட்பங்களில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருந்தது. குறிப்பாக விண்வெளி தகவல் தொடர்பு மற்றும் "ரிமோட் சென்சிங்" ஆகியவற்றில் நாம் முதன்மையாக இருந்தோம்.

10 விண்வெளி வீரர்கள்...

 கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா தூங்கிய நிலையில் இருந்தபோது சீனா நம்மை முந்தி சென்றுவிட்டது. சீனாவில் தற்போது 10 விண்வெளி வீரர்கள் உள்ளனர். இவர்கள் விண்வெளிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு விண்வெளி ஆய்வு மையம் இருக்கிறது. இது தொடர்பான 50 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. 2015-ம் ஆண்டில் அது செயல்பாட்டுக்கு வரும் என்று நான் கருதுகிறேன்.

சீனாவின் முன்னேற்றம்...

 சீனா 25 டன் எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த ராக்கெட்டுகளை தயாரிக்கிறது. இத்துடன் சீனா விண்வெளி திட்டங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஆசியாவில் மட்டுமல்ல உலக அளவில் அந்த நாடு முன்னேறி செல்கிறது.

தெளிவான திட்டமில்லை...

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் தீட்டப்பட்ட திட்டங்களை தான் இந்தியா தற்போது செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அதாவது நத்தையை போல் இந்தியா மெதுவாக ஊர்ந்து செல்கிறது. விண்வெளி துறையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு நம்மிடம் ஒரு தெளிவான திட்டங்கள் இல்லை.

பற்றாக்குறை...

 தொலை மருத்துவம், தொலை கல்வி மற்றும் கிராம ஆதார மையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களில் மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை உள்ளது. இதற்காக நாம் ஒன்றும் செய்யவில்லை.

தவறான செயல்...


 கடல் தொடர்பாக ஆய்வு செய்ய இந்தியா சார்பில் ஒரு செயற்கைகோள் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்றொரு செயற்கைகோளை இன்னும் அனுப்பவில்லை. இந்த சூழ்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவது என்பது ஒட்டுமொத்தமாக தவறான செயல் ஆகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.