சிகரெட், குட்கா போன்ற புகையிலை பொருட்களைத் தொடமாட்டேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே, இந்தியாவின் ராஜஸ்தான் மாநில அரசுப் பணிகளில் இனி சேர முடியும். இது தொடர்பான சுற்றறிக்கையை ராஜஸ்தான் மாநில அரசின் அனைத்துத் துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளது அம்மாநில பணியாளர் துறை. அதில், அரசுப் பணியில் சேருவோரிடம், இனிமேல் சிகரெட் பிடிக்கவோ அல்லது குட்கா பயன்படுத்தவோ மாட்டேன் என்று எழுத்து மூலம் உறுதிமொழி பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மாநில அளவிலான புகையிலைக் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு, இந்த எழுத்துவழி உறுதி மொழி குறித்துப் பரிந்துரை செய்தது. இதன் மூலம், ஆரம்ப கட்டத்திலேயே இளைஞர்களிடம் இருந்து அந்தப் பழக்கத்தை அகற்ற முடியும் என்று அந்தக் குழு தெரிவித்திருந்தது. “குட்கா மெல்லுவதும் புகைபிடிப்பதும் உடல் நலத்திற்குக் கேடானது. அவற்றின் பயன்பாட்டை நாகரிகம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. அந்தப் பழக்கங்களில் இருந்து மக்கள் விலகி இருக்கவேண்டும்,” என்றார் பணியாளர் துறையின் முதன்மைச் செயலர் சுதர்சன் சேத்தி. ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் வெளியான அதே நாளில் அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இந்தப் புகையிலைத் தடுப்பு அறிவிப்பையும் வெளியிட்டது.
No comments:
Post a Comment