Latest News

நம் உடம்பில் கால்சியம் குறைபாடு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்வது நல்லது !!

மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. மேலும் தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமாகலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவதில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறார்கள்.

இந்த கால்சியம் எலும்புகள், பற்களுக்கு மட்டுமல்ல, தசை இயக்கத்திற்கு நரம்புகள் இயக்கத்திற்கு ரத்தம் உறைவதற்கு தேவையான தாதுப்பொருள்.உடலுக்கு கால்சியம் வாழ் நாள் முழுவதும் தேவை. ஆனால் வளரும் பருவத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிக அளவில் அவசியம் தேவை.
உடலில் அதிகம் உள்ள தாதுப் பொருள் கால்சியம். ஒரு நன்கு வளர்ந்த ஆணிடம் 1200 கிராம் கால்சியமும், பெண்ணிடம் 1000 கிராமும் உள்ளது. உடல் எடையில் 1.5 லிருந்து 2.0 சதவிகிதம் கால்சியம் உடலில் உள்ள எல்லா தாதுப் பொருட்களில் 39% கால்சியம் தான். இதில் 99% எலும்பில் தான் (பற்களை சேர்த்து) இருக்கிறது. மீதி 1% ரத்தத்திலும், சில திசுக்களிலும் இருக்கும்.கால்சியத்தின் உற்ற தோழன் பாஸ்பரஸ். இவை இரண்டும் இணைந்து தான் கால்சியம் பாஸ்பேட்டாக (கால்சியம் கார்பனேட்டுடன்) எலும்புகளில், பற்களிலும் அமைந்திருக்கின்றன.

இந்நிலையில் சூரிய ஒளியே படாத சூழலில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள், பால், இறைச்சி போன்றவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னை வரும். கால்சியம் குறைபாடானது, தசைகளை வலுவிழக்கச் செய்வதுடன், தசைகளில் வலியையும் உண்டாக்கும்.

தசைகள் பலவீனமாவது, தசைப்பிடிப்பு, நாள்பட்ட கால்வலி, நாள்பட்ட முதுகு வலி, கால்களில் ஒருவித மதமதப்பு போன்ற அறிகுறிகளும் தென்படலாம். உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் மறைமுகக் காரணமாகலாம். வலி என்றதும் பெரும்பாலான மக்கள், உடனடியாக வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொள்வார்கள். அதில் குணம் தெரியாவிட்டால், அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தாவி, ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை வரை போவார்கள்.

எதிலுமே பலன் இருக்காது. சரியான வலி நிவாரண மருத்துவரை அணுகி, நோயின் அறிகுறியைச் சொல்லி, அதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவை ரத்தத்தில் கண்டுபிடிக்கக் கூடிய சோதனையை மேற்கொள்ள வேண்டும். அந்த அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கத் தவறினால், எலும்புகள் வலுவிழந்து நொறுங்கிப் போகலாம். வயதானவர்களாக இருந்தால், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கலாம். லேசான பொருளைத் தூக்கினாலே எலும்புகள் நொறுங்கலாம். சின்ன அடி பட்டாலே தொடை எலும்புகளும், முதுகெலும்பும் தானாகவே நொறுங்கலாம். முதுகெலும்பு நொறுங்குவதால் எலும்புகள் அழுத்தப்பட்டு, கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

இப்படி சாதாரண வலி முதல் வாழ்க்கையையே முடக்கிப் போடும் அபாய வலி வரை பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமான கால்சியம் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதே புத்திசாலித்தனம். 24 மணி நேரமும் ஏசி அறையிலேயே இருப்பது, வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொள்வது, சருமம் வெளியில் தெரியாமல் உடல் முழுக்க மூடிக் கொண்டு செல்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வெயிலே படாமலிருந்தாலும் ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்…

நன்றி:http://indru.todayindia.info

ஸ்ரீவித்யா

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.