சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ள பொது மன்னிப்புக் காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, சட்ட மீறலாகத் தங்கியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களும், பணி அனுமதி அட்டை இல்லாத அயல்நாட்டுப் பணியாளர்களும் தங்கள் நிலையைச் சட்டத்திற்குட்பட்டதாக மாற்றிக்கொள்ள சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் ஆறுமாதக் காலம் பொது மன்னிப்பு அளித்திருந்தார். இக்காலத்திற்குள் வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களுடைய நிலைமைகளைச் சரிசெய்துகொள்ளவோ அல்லது எவ்வித தண்டனையோ, அபராதமோ இன்றி தாய்நாடு திரும்பவோ செய்யலாம் என்று சலுகை அளிக்கப்பட்டிருந்தது.
ஜூலை 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த அந்தப் பொதுமன்னிப்புக் காலத்தை மேலும் நான்கு மாதங்கள் நீட்டித்து நவம்பர் 3 ஆம் தேதி வரை சலுகை தொடரும் என்று மன்னர் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு தூதரகங்களும் கேட்டுக்கொண்டதிற்கிணங்க இந்தக் கால நீட்டிப்பு அளிக்கப்படுவதாக சவூதிஅரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பல்வேறு தூதரகங்களும் மீண்டும் கால நீட்டிப்பு கேட்டுள்ளன என்ற போதிலும், மீண்டும் கால அவகாசம் அளிக்க இயலாது என்று சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சக அலுவலர் ஹத்தாப் அல் அனீஸி “வியாழனன்று சில செய்தியோடைகளில் கால நீட்டிப்பு கிடைக்கலாம் என்று வந்த செய்தி உண்மையில்லை” என்று கூறினார். இக்காலம் முடிந்ததும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வரம்பு மீறியவர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment