சென்னை : கடந்த ஆகஸ்ட் 13ஆம் தியதி திருச்சியைச் சார்ந்த தவ்பீக் சுல்தானா என்ற 8ஆம் வகுப்பு மாணவியின் உடல் இரயில் நிலைய இருப்புப் பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது.
இம்மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டுள்ளாள்; இவ்வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை; விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
முதல்வர் தனது உரையின் போது, "திருச்சியில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி தவ்பீக் சுல்தானா பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வரை குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை. விரைவில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அது குறித்து எனது விளக்கத்தினை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
திருச்சி காஜாமலை பகுதியைச் சார்ந்த அக்பர் பாட்ஷா என்பவரின் மகள் தவ்பீக சுல்தானா மேல்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ஆம் தியதி பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என்று அவரது உறவினர் ஜமாலுதீன் என்பவர் அடுத்த நாள் 14ஆம் தியதி அளித்த புகாரின் அடிப்படையில், பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தது.
இந்நிலையில், காணாமல் போன் தவ்பீக் சுல்தானாவின் உடல் இரயில் தண்டவாளத்திற்கு அருகில் கிடப்பதாக தகவல் வந்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி இரயில்வே காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, எடைமலைபட்டிபுதூர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எதிரிகளை கைது செய்ய வேண்டுமெனவும் கோரி, தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்து ஆகஸ்ட் 15 மற்றும் 16ஆம் தியதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பின்னர், மாணவி தவ்பிக் சுல்தானா குறித்த இரு வழக்குகளும் ஆகஸ்ட் 30ஆம் தியதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு புலன் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், பள்ளிக்குச் சென்ற மாணவி, வழக்கப்படி வீட்டுக்குச் செல்லாமல் இரயில் பாதையில் நடந்து சென்றதை பல சாட்சிகள் கண்டுள்ளனர். பிரேத பரிசோதனையில், இரயில் அடிப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.
இது விபத்தால் நடந்ததா அல்லது தற்கொலையா அல்லது ஏதேனும் வன்முறையினால் நடைபெற்ற மரணமா என்பது இன்னும் புலன் விசாரணையில் தான் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
No comments:
Post a Comment