Latest News

பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை சில!


குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.
*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’ என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.