மும்பை தானேவில் உள்ள குஜராத் பாலியல் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண்சாயின் ஆசிரமம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.தானே மாவட்டம் விரார் கிழக்கு மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் கற்பழிப்பு புகாரில் சிக்கிய பிரபல சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் ஆசாராம் பாபுவின் கொள்கையை பின்பற்றுபவர்கள் பஜனைகள் நடத்தி வந்தனர். அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆசாராம் பாபுவின் மகன் நாராயண சாய் தனது உதவியாளராக வேலை செய்து வந்த மகேந்திர சிங் சாவ்லாவின் பெயரில் அந்த இடத்தை ஆக்கிரமித்து அங்கு ஆசிரமம் கட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான தகவல் மகேந்திர சிங் சாவ்லாவிற்கு தெரியவந்ததும் அவர் நாராயண சாயிடம் உதவியாளராக வேலை செய்வதை நிறுத்திவிட்டார். மேலும் இதுதொடர்பாக நாராயண சாய் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து வசாய்- விரார் மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ஆகியோர் ஆசிரமம் இருந்த இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் ஆசிரமம் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆசிரமத்தை காலி செய்யுமாறு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கடந்த வாரம் ஆசிரம நிர்வாகிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஆசிரமத்தை காலி செய்யவில்லை. இதனையடுத்து ஆசிரமத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று காலையில் வசாய்-விரார் மாநகராட்சி ஆக்கிரமிப்பு தடுப்பு துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ஆகியோர் பொக்லைன் எந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆசாராம் பாபுவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகள், ஆசிரமத்தின் அருகே இடைவெளி விட்டு கட்டப்பட்ட அறைகள் அனைத்தும் சுமார் 2½ மணி நேரத்தில் இடித்து தள்ளப்பட்டது.
நன்றி : http://indru.todayindia.info/
No comments:
Post a Comment