பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி தனஞ்செய் சிங்கின் வீட்டு வேலைக்காரப் பெண்ணை, அவரது மனைவி 3 நாட்களாக சித்ரவதை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசம் ஜான்பூர் தொகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி தனஞ்செய் சிங்(38). மனைவி டாக்டர் ஜக்ரிதி சிங். டெல்லியில் உள்ள இவர்களது வீட்டில் ராக்கி(35) என்ற பெண் வேலை செய்தார்.
இவர் நேற்று முன்தினம் இறந்தார். டெல்லி போலீசார் தனஞ்செய் சிங் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். ராக்கியின் தலை, மார்பு, கை மற்றும் வயிற்றில் காயங்கள் இருந்தன. அவர் இறந்து 12 நேரம் கழித்தே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீட்டில் வேலை செய்த மற்ற வேலைக்காரர்களிடம் நடத்திய விசாரணையில், ராக்கியை, ஜக்ரிதி அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. கொலையை மறைப்பதற்கும், ஆதாரங்களை அழிப்பதற்கும் எம்.பி தனஞ்செய் சிங் முயற்சி செய்துள்ளார்.
இதனால் இருவரையும் டெல்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் வீட்டில் வேலை செய்த மைனர் சிறுவனின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் பதிவு செய்தனர். அப்போது வேலைக்காரச் சிறுவன் கூறியதாவது:கடந்த 1ம் தேதி அன்று உணவு சமைப்பதற்கு தாமதம் ஆனதால், ஜக்ரிதி கோபம் அடைந்து, ராக்கியை இரும்புக் கம்பியால் அடித்தார். ராக்கிக்கு ரத்தம் கொட்டியது.
அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்லவில்லை. அவருக்கு சாப்பாடும் வழங்கவில்லை. அடுத்த நாளும் ராக்கியை, ஜக்ரிதி அடித்து துன்புறுத்தினார்.மறுநாள் அதிகாலை 3.50 மணியளவில் ராக்கியை எழுப்பும்படி என்னிடம் கூறி, ஒரு தட்டில் சாதத்தை விட்டெறிந்தார். தூக்கத்திலிருந்து நான் 10 நிமிடம் தாமதமாக எழுந்ததால், என்னை ஜக்ரிதி அடித்தார். தீபாவளி அன்று ராக்கியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. ராக்கி பலமாக காயம் அடைந்திருப்பதால், அவரை எழுப்ப வேண்டாம் எனவும், அவர் தூங்குவதற்காக ஊசி போட்டுள்ளதாகவும், ஜக்ரிதி கூறினார். திங்கள் கிழமை காலை ராக்கி இறந்துவிட்டார். தகவல் அறிந்து வந்த எம்.பி தனஞ்செய் சிங் வீட்டை சுற்றி பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றினார். யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என வீட்டில் வேலை செய்தவர்களிடம் அவர் எச்சரித்தார். இவ்வாறு வேலைக்கார சிறுவன் கூறினான்.
5 நாள் போலீஸ் காவல்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.பி தனஞ்செய் சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.ராக்கியை தாக்கிய ஆயுதங்கள், ரகசிய கேமிரா பதிவுகள் ஆகியவற்றை மீட்க வேண்டியிருப்பதால் இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப போலீஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் அனுப்ப மாஜிஸ்திரேட் தீரஜ் மிட்டல் உத்தரவிட்டார்.
நன்றி : http://indru.todayindia.info
No comments:
Post a Comment