நரேந்திரமோடி மனைவி இருப்பதை மறைத்தாரா என்பது பற்றி தேர்தல் வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திரமோடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் குஜராத் சட்டசபை தேர்தலில் மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் உண்மைகளை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சரோகி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நரேந்திரமோடி வேட்பு மனுவில் அவருக்கு மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். நரேந்திரமோடி மனைவி பெயர் ஜசோதா பென். இவர் 1951 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி பிறந்தார். இவருக்கும் நரேந்திர மோடிக்கும் 1968 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் நரேந்திர மோடி இதை மறைத்துவிட்டார். பொது வாழ்க்கையில் இருப்பவர் இவ்வாறு உண்மையை மறைப்பது தவறு. இதுபற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி சதாசிவம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கோலின் கான்சால் வேஸ் ஆஜராகி வாதாடுகையில், நரேந்திர மோடி வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் பொய். மனைவி இருப்பதை மறைத்துவிட்டார். தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை நிராகரித்து இருக்க வேண்டும். அவரது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ள தகவல்களில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு என்றார்.
வக்கீல் வாதத்துக்குப் பின் தலைமை நீதிபதி சதாசிவம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது, நரேந்திரமோடியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நன்கு சரிபார்த்துதான் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன இருக்கிறது. எனவே மனுதாரர் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி சதாசிவம் கூறினார்.
No comments:
Post a Comment