உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை ஆகியவற்றால் அவதிப்படும் மாஜி எகிப்து அதிபர் முகமது மோர்சிக்கு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்நாட்டு அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் முகமது மோர்சி. அதன்பின் 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபரான முகமது மோர்சி.
முபாரக்கின் அரசியல் கட்டமைப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு தன்னிடம் வரம்பற்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டார்.இந்த அதிகாரங்கள் நீதித்துறையின் மேற்பார்வை அல்லது பரிசீலனை இல்லாமல் சட்டம் இயற்றும் சக்தியை அவருக்கு அளித்தது. அத்துடன் பத்திரிகையாளர்களும், வன்முறையற்ற ஆர்ப்பாட்டக்காரர்களும் தாக்கப்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டங்களின் விளைவாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதி எகிப்து ராணுவத்தால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
புதிய நிர்வாகம்:
எகிப்து தலைமை நீதிபதி தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது.கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது மாளிகைக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அது குறித்த விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது. மோர்சியுடன் மேலும் 14 பிரதிவாதிகள் இந்த விசாரணையை எதிர்கொள்கின்றனர். இந்த விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது. விசாரணையின் போது கெய்ரோ கோர்ட்டில் முகமது மோர்சி ஆஜர்படுத்தப்பட்டார். 3 மாதங்களுக்கு பின்னர் முதன்முறையாக அவரது முகத்தை காண ஏராளமான ஆதரவாளர்கள் கோர்ட்டின் முன் திரண்டனர்.
வழக்கமாக கைதிகளுக்கு அளிக்கப்படும் சீருடையை அணியாமல் ‘சூட்’ உடுத்தி வந்த அவர், ‘நான் தான் முகமது மோர்சி. எகிப்து குடியரசின் அதிபர்’ என்று நீதிபதியை நோக்கி கம்பீரமாக கூறினார்.எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சி கவிழ்ப்பு என்பது தேசத் துரோக குற்றம். இந்த குற்றத்தை செய்தவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டபூர்வ அதிபரான எனது ஆட்சிக்கு எதிராக சதி செய்தவர்களை காப்பாற்ற நீதிமன்றம் முயற்சிக்க கூடாது என்று கூறிய மோர்சியை நோக்கிய நீதிபதி ‘கைதிகளுக்கான சீருடையை அணியாமல் கோர்ட் விசாரணையில் பங்கேற்க கூடாது’ என்று அறிவுறுத்தினார்.ஆனால், ‘அதிபராக இருக்கும் என்னால் கைதிகளுக்கான சீருடையை அணிய முடியாது’ என்று மோர்சி மறுத்து விட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கின் மறுவிசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.விசாரணை முடிந்ததும் முகமது மோர்சி உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி அலெக்சாண்டிரா நகர் அருகே உள்ள பாதுகாப்பு நிறைந்த பாலைவன சிறைக்கு அனுப்பபட்டார்.தற்போது சிறை மருத்துவமனையில் உள்ள தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார் மோர்சி.
நன்றி : http://indru.todayindia.info/
No comments:
Post a Comment