இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதுடன் தமிழகத்தின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மன்மோகன்சிங் சென்று வரலாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் யோசனை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பல லட்சம் தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கை. அத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றால் எதிர்ப்பு தெரிவித்து வரும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழீழ செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை உயிரோடு இலங்கை ராணுவம் கைது செய்து பலாத்காரம் செய்து பின்னர் படுகொலை செய்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகத்தை உறைய வைத்திருக்கிறது. இதனால் மத்திய அரசு கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள டெல்லி வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்வேறு யோசனைகளை முன்வைத்து வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இம்மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக எதிர்ப்பை ஏன் உருவாக்கிக் கொள்ள வேண்டும்? என்றும் காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இதனால் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணப் பகுதிக்கும் பிரதமர் மன்மோகன்சிங் சென்றால் தமிழர்களை சற்றே சமாதானப்படுத்தலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த யோசனையை வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளும் பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசித்திருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும் கூட, யாழ்ப்பாணத்துக்கு நிச்சயம் பிரதமர் மன்மோகன்சிங் செல்ல வேண்டும். அப்படி சென்றால் தமிழர்கள் அதை வரவேற்பார்கள் என்று முன்னோட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.
நன்றி : http://indru.todayindia.info
No comments:
Post a Comment