சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி ஏற்படுத்தினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் மூலம் இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார்.
நேற்றைய போட்டியின்போது 51 ரன்கள் சேர்த்த டோனி, போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தனது சாதனையை கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். ஆனால், பரபரப்பான கடைசி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதால் டோனியின் உற்சாகம் குறைந்துவிட்டது.
இதேபோல் அனைத்து ஐசிசி தொடர்களிலும் வெற்றி பெற்ற, அதாவது 20 ஓவர் உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையையும் டோனி பெற்றுள்ளார்.
கேப்டன் பொறுப்பில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களில் தற்போது அசாருதீன் முதலிடத்தில் உள்ளார். அவர் 174 போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தியிருக்கிறார். இதேபோல் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் வரிசையிலும் அசாருதீன் (90 வெற்றி) முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் டோனி (87 வெற்றி, 51 தோல்வி) இருக்கிறார். 147 போட்டிகளில் கேப்டனாக இருந்த கங்குலி, 66 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் ரிக்கி பாண்டிங்தான். இவர் 230 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment