கூடா நட்புக்களால் சமூக விரோதிகளாக மாறிய இளைஞர்களை மத்திய அரசு மன்னிக்கத் தயாராக இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறி இருக்கிறார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே பேசியதாவது:–ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 24 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை ஒரு தீர்வாகாது. நமது இளைஞர்களில் சிலர் தவறான தத்துவங்களால் கவரப்பட்டு வன்முறை பாதையை தேர்ந்து எடுத்துள்ளனர்.
அவர்களும் நம்மில் ஒருவர் தான். அவர்களை மன்னிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வன்முறை பாதையை விட்டு விலகி அவர்கள் வந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயார். இதன் அடிப்படையில் தான் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதற்காக சமுதாயத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக அரசு உறுதி பூண்டுள்ளது. வளர்ச்சி என்று நான் கூறுவது, நாட்டின் உற்பத்தி அதிகரிப்பு பற்றி ஒப்பிடவில்லை. அடிப்படை தேவைகள் உதாரணமாக கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு, தொடர்புத்துறை போன்றவை நாட்டில் அனைத்து குடிமகன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கான ஒட்டு மொத்த வளர்ச்சியை கூறுகிறேன்.இளைஞர்கள் சாதி, சமய கோட்பாடுகள், சமுதாயத்தில் உள்ள பழங்கால தீமைகள் எல்லாவற்றையும் தகர்த்தெறிய முன்வர வேண்டும்.
நீங்கள் வெற்றி பெற்ற நபராக இருப்பதைவிட, மதிப்பு மிக்க நபராக இருப்பதே மிகவும் முக்கியம். நீங்கள் பெற்ற கல்வி, அறிவு உங்களை மட்டும் மேம்படுத்திக் கொள்ளாமல், ஒட்டு மொத்த சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு சுசில்குமார் ஷிண்டே பேசினார்.
No comments:
Post a Comment