Latest News

மதுரை அரசு மருத்துவமனையில் 7 மாதங்களில் 7744 குழந்தைகள் இறப்பு


மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 7 மாதங்களில் 7,744 குழந்தைகள் இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில் பேறுகாலத்தின்போது 57 பெண்கள் இங்கே இறந்துள்ளனர். இதனால், சிசு, பச்சிளம் குழந்தைகள் மட்டுமின்றி பேறுகாலத்தில் பெண்கள் இறப்பு விகிதத்திலும் தமிழகத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது மதுரை.

குழந்தைகள் இறப்பில் முதலிடம் பிரசவத்தின்போது தாய், குழந்தையின் இறப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், யாருக்கும் வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது, மருத்துவமனையில் மட்டுமே பிரசவம் நடைபெற வேண்டும் என்று அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், மருத்துவத்தில் மேம்பட்டதாகக் கருத்தப்படும் தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மதுரை அரசு மருத்துவமனையில்தான் குழந்தைகள் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. இதனை மருத்துவத் துறையே ஒப்புக் கொண்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமநீதி அமைப்பின் (ஈக்குவல் ரைட்ஸ் ஆர்கனைஷேசன்) செயல் இயக்குநர் சி.ஆனந்தராஜ் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிசு மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பு குறித்த புள்ளிவிவரங்களைக் கேட்டுப் பெற்றுள்ளார். இதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 12,985 குழந்தைகளும், 2012-ம் ஆண்டு 14,172 குழந்தைகளும் இறந்துள்ளன.

இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் வெறும் 7 மாதங்களில் மட்டும் மொத்தம் 12,906 பெண்கள் பிரசவத்துக்காக வந்துள்ளனர். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் 7,744 குழந்தைகள் மருத்துவமனையிலேயே இறந்துள்ளன.

வழக்கிற்குப் பிறகும் தொடரும் அவலம்

இதுகுறித்து சமநீதி அமைப்பின் செயல் இயக்குநர் சி.ஆனந்தராஜ் மேலும் கூறுகையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் தரமற்ற மருத்துவ சேவை காரணமாக சிசு இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக கடந்த ஆண்டே எங்கள் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளோம்.

குழந்தைகள் இறப்பைத் தடுக்க மருத்துவ வசதிகளை மேம்படுத்த இருக்கிறோம் என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த அரசு மருத்துவமனை நிர்வாகம் அதன்படி சில கோடி ரூபாய்களை செலவழித்து சில பணிகளைச் செய்தது. ஆனால், குழந்தைகள் இறப்பு விகிதம் குறையவே இல்லை. கடந்த 7 மாதங்களில் இறந்த 7,744 குழந்தைகளில் 22 சிசுக்களும் (பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தைகள்) அடக்கம்.

மதுரை அரசு மருத்துவமனையைவிட தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துமனையில் ஆண்டுதோறும் சுமார் 7 ஆயிரம் குழந்தைகள் அதிகமாகப் பிறக்கின்றன. ஆனால், மதுரையுடன் ஒப்பிடும்போது, அங்கு குழந்தைகள் இறப்பு விகிதம் மிக மிகக் குறைவாக உள்ளது. அங்கு ஆண்டுக்கு 550 குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன. இத்தனைக்கும் மதுரையைப் போலவே தஞ்சையும் கிராமங்கள் சூழ்ந்த பகுதி. ஆக, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் ஏதோ பிரச்சினை இருப்பதை உணர முடிகிறது.

2011 ஜனவரி முதல் 2013 ஜூலை வரையிலான இரண்டரை ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் மற்றும் இறந்த குழந்தைகள் குறித்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மதுரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 34 குழந்தைகள் இறப்பது தெரியவந்துள்ளது. இது தமிழகத்திலேயே மிக அதிகம். பெண்கள் இறப்பிலும் முதலிடம் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பதிலும்கூட மதுரை அரசு மருத்துவமனையே முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 7 மாதங்களில் இங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 12,900 பேரில், 57 பெண்கள் இறந்துள்ளனர். அதாவது, மாதந்தோறும் சராசரியாக 8 பெண்கள் இறந்துள்ளனர். ஆனால், 16,420 பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தஞ்சை மருத்துவமனையில், 14 பேர் மட்டுமே இறந்துள்ளனர். நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில், குழந்தைகள் இறப்பும், பிரசவத்தில் தாய்மார்கள் இறப்பும் மிகக்குறைவாக உள்ளது.

நிதி எங்கே போகிறது?

தமிழகத்தில், அண்டை மாநிலங்களில் இல்லாத சிறப்புத் திட்டமான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு பேறுகால உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 23 ஆயிரத்து 795 பெண்கள் பயனடைந்ததாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த நிதியாண்டு, இந்தத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.123 கோடி அதாவது மொத்தம் ரூ.720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி கர்ப்பிணிகளை முழுமையாகச் சென்றடைகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. தனியார் மருத்துவமனைகளைப்போல, அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மோகனிடம் இதுபற்றிக் கேட்டபோது, மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது பற்றி, உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து அதைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்கே சிசு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக புதிதாக 4 வென்டிலேட்டர்கள் வாங்கியிருக்கிறோம். தற்போது இங்கு 9 வென்டிலேட்டர்கள் இருக்கின்றன.

இருக்கிற வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தி குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாத தாய்மார்களுக்கு கர்ப்பம், குழந்தைகள் நலன் பற்றிய கருத்தரங்குகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.