சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று பிற்பகல் இம்மனு மீது விசாரணை நடைபெறுகிறது.
பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கார் மூலம் வியாழக்கிழமை திருச்சியில் இருந்து சென்னை சென்றார். உளுந்தூர்பேட்டை சுங்கவரி வசூல் சாவடியில் சுங்கவரி வசூலிப்பதற்காக ஊழியர்கள் அன்புமணி ராமதாஸ் காரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரது கார் சென்றுவிட்டது.
அவரது காருக்கு பின்னால் வந்த பாமகவினர், எங்கள் அய்யா காரை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் பாமகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர், இதில் ஊழியர்கள் சந்தோஷ், சிவகொழுந்து உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்திய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாமகவைச் சேர்ந்த விக்கிரவாண்டியை அடுத்த புத்தாம் பூண்டி சக்திவேல், ஜீவானந்தம், விழுப்புரம் மருவூர் ராஜு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, பணியாளர்களை அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் அன்புமணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த வந்ததாக விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் சென்னையில் உள்ள அன்புமணி வீட்டுக்கு சென்றனர். வீட்டில் அன்புமணி இல்லாததால் திரும்பிச் சென்றனர்.
இதையடுத்து அன்புமணி ராமதாஸ் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
No comments:
Post a Comment